இந்தியாவில் இருந்து அதிக சுற்றுப்பயணிகளை சிங்கப்பூருக்கு ஈர்ப்பதற்காக சிங்கப்பூர் பயணத் துறைக் கழகம் ஆயத்தமாகி வருகிறது.
இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைகள் திறந்துவிடப்படுகின்றன. ஈராண்டுகளுக்குப் பிறகு இம்மாதம் 27ஆம் தேதி அனைத்துலகப் பயணங்களைத் தொடங்க இந்தியா திட்டமிட்டு இருக்கிறது.
அதேவேளையில், சிங்கப்பூர் இம்மாதம் 4ஆம் தேதி முதல் இந்தியாவுக்கான விடிஎல் பயணப்பாதை ஏற்பாட்டை அனைத்து இந்திய நகர்களுக்கும் நீட்டித்து இருக்கிறது.
இந்நிலையில், இந்தியர்கள் விடுமுறையில் சிங்கப்பூருக்கு வரத் தொடங்கிவிட்டார்கள் என்று பயணத்துறைக் கழகத்தின் இந்தியா, மத்திய கிழக்கு, தெற்காசியாவுக்கான வட்டார இயக்குநர் ஜி. பி. ஸ்ரீதர் தெரிவித்தார்.
இன்னும் சில நாள்களில் பள்ளி விடுமுறை தொடங்கும்போது இந்தியப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
இவ்வேளையில், இந்தியச் சுற்றுப் பயணிகளுக்கு சிங்கப்பூர் பற்றி மேன்மேலும் நினைவுபடுத்துவதற்காக இந்தக் கழகம் 'சிங்கப்பூர் மறுஉருவாக்கம் இயக்கம்' என்ற ஓர் இயக்கத்தைத் தொடங்கி இருக்கிறது.
அந்த இயக்கம் நேற்று தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் தொடங்கப்பட்டது.
அந்த இயக்கம் தொடர்பில் St+art India அறநிறுவனம் என்ற அமைப்புடன் சேர்ந்து கழகம் செயல்படுகிறது.
சிங்கப்பூர் கலைஞர் திருவாட்டி டினா ஃபாங்கும் இந்தியக் கலைஞர் திருவாட்டி ஓஷியன் சிவா வும் சேர்ந்து சென்னை ஃபீனிக்ஸ் மார்க்கெட்சிட்டியில் பெரியளவில் அமைத்திருக்கும் ஒரு காட்சியும் அந்த இயக்கத்தில் உள்ளடங்கும்.
இந்த இரு கலைஞர்களும் இணைந்து கலாசாரம் தழுவிய 'எதிர்காலக் கனவுகள்' என்ற பெரிய அளவிலான ஓவியப் படைப்புகளை உருவாக்கி இருக்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து பார்க் ஹயட் ஹோட்டலில் செயல்படும் 'மிஸ்டர். ஓங்-தி ஃபிளேவர்ஸ் ஆஃப் சிங்கப்பூர்' ஹோட்டலில் இன்று சமையல் கலை நிகழ்ச்சி நடைபெறும்.
சிங்கப்பூர் மறுஉருவாக்கம் இயக்கம் வரும் மாதங்களில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் நீட்டிக்கப்படும் என்று சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் தெரிவித்து உள்ளது.

