2025 உலக திடல்தடப் போட்டியை நடத்த சிங்கப்பூர் முயற்சி

2025 உலக திடல்தடப் போட்டியை நடத்த சிங்கப்பூர் முயற்சி

2 mins read

உலக திடல்தட விளையாட்டுப் போட்டியை 2025ல் நடத்த அனுமதி கேட்டு சிங்கப்பூர் விண்ணப்பித்து உள்ளது.

இதில் வெற்றி கிடைத்தால் சிங்கப்பூர் விளையாட்டு மையத்தில் உலக வீரர்கள் ஒன்று திரள்வார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அந்த 20வது போட்டியை ஏற்று நடத்துவதற்கு அனுமதி பெற சிங்கப்பூர் 2021ல் விண்ணப்பித்ததாக தகவல் வட்டாரங்களை மேற்கோள் காட்டி நேற்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.

இதன் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இந்த ஆண்டின் கடைசிக் காலாண்டில் வெளியிடப்படும் என்று தெரிகிறது. கொரோனா தொற்று காரணமாக இந்தப் போட்டி ஓராண்டு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இதனால் அடுத்த உலக திடல்தட போட்டிகள் ஜூலை 15ஆம் தேதி முதல் முதல் 24ஆம் தேதி வரை அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்தின் இயூஜின் நகரில் நடக்கும்.

பிறகு அது 2023ல் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் நடக்கும். 2025 உலக திடல்தட போட்டியை ஏற்று நடத்த ஜப்பான், கென்யா, போலந்து உள்ளிட்ட இதர நாடுகளும் விண்ணப்பித்துள்ளன.

சிங்கப்பூருக்கு அனுமதி கிடைக்குமானால் தென்கிழக்கு ஆசியாவில் அந்தப் போட்டியை நடத்தும் முதல் நாடாக சிங்கப்பூர் திகழும். ஆசியாவில் இதுவரை ஜப்பான், தென் கொரியா, சீனா, கத்தார் ஆகிய நாடுகளில் ஐந்து முறை மட்டுமே இந்தப் போட்டிகள் நடந்துள்ளன. உலக திடல்தட விளையாட்டுப் போட்டிகள் அமைப்பின் மதிப்பீட்டுக் குழு ஒவ்வொரு விண்ணப்பத்தையும் வரும் மாதங்களில் மதிப்பிடும்.

இத்தகைய உலகப் பெரும் நிகழ்ச்சிகளை அதிகம் நடத்திய அனுபவம் சிங்கப்பூருக்கு இல்லை என்றாலும் உலகத் தரமிக்க உள்கட்டமைப்பு வசதிகள் இங்கு உள்ளன. இதர அம்சங்களுடன், 55,000 இட வசதிகளுடன் $1.33 பில்லியன் செலவில் 2014ல் திறக்கப்பட்ட விளையாட்டு மையம் சிங்கப்பூருக்கு மிக அனுகூல மானதாக இருக்கும்.