கொவிட்-19 கட்டுப்பாடுகள் அண்மையில் தளர்த்தப்பட்டதால், இவ்வாண்டு பங்குனி உத்திரத் திருவிழாவில் அதிகமான பக்தர்கள் கலந்துகொள்ள இயன்றதாக சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கூறியுள்ளார்.
புனித மரம் பாலசுப்ரமணியர் ஆலயத்தில் நடைபெற்றுவரும் பங்குனி உத்திரத் திருவிழாவில் அமைச்சர் கலந்துகொண்டார்.
அவருடன் நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் டேரிக் கோ, லூயிஸ் இங், கேரி லாம் ஆகியோரும் ஆலயத்துக்கு வருகையளித்தனர்.
கடந்த முப்பது ஆண்டுகளாகப் பங்குனி உத்திரத் திருவிழாவில் கலந்துகொள்ளும் அமைச்சர் சண்முகம், பக்தர்கள் ஆலயத் தொண்டூழியர்கள் இடையே நல்ல புரிந்துணர்வு இருப்பதால், விழா சுமுகமாக நடைபெற்றுவருவதாக குறிப்பிட்டார்.
கொவிட்-19 சூழலில் இரண்டாவது முறையாக ஆலயத்தில் திருவிழா நடைபெற்றுவருகிறது.
தற்போதைய கொவிட்-19 நிலவரத்தால் இவ்வாண்டு பால்குடங்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளது. பக்தர்கள் நேற்று நள்ளிரவு முதற்கொண்டு தங்களது காணிக்கைகளைச் செலுத்தி வருகின்றனர். கிட்டத்தட்ட 10,000 பக்தர்கள் இவ்விழாவில் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமிப்பரவல் தொடங்கிய 2020ஆம் ஆண்டில் இந்தத் திருவிழாவில் பொதுமக்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை. மலு ஆண்டில் பால்குடங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. 2021ஆம் ஆண்டில் போலவே இவ்வாண்டிலும் அலகு காவடிகளைச் செலுத்துவதற்கு அனுமதியில்லை. ஆனால் குழந்தைகளுக்கான முடி காணிக்கை செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தி நாளைய தமிழ் முரசில் இடம்பெறும்.


