பேச்சுவார்த்தை நடைபெறுவதாக ஒருபக்கம் செய்திகள் வந்தாலும் உக்ரேன் மீதான ரஷ்யப் படையின் தாக்குதல் நின்ற
பாடில்லை. லிவிவ் என்னும் மேற்கு உக்ரேன் நகரில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் அங்கு இருந்த விமானப் பழுதுபார்ப்புத் தொழிற்சாலை அழிந்ததாகவும் யாருக்கும் காயமில்லை என்றும் அந்நகர மேயர் கூறினார்.
வெள்ளிக்கிழமை (நேற்று) காலை இந்நகரின் விமான
நிலையத்தின் மேலே ஆகாயவெளியில் கடும்புகை எழும்பியதைத் தாம் கண்டதாக ஏஎஃப்பி செய்தியாளர் ஒருவர் கூறினார்.
அந்த இடத்தை நோக்கி ஆம்புலன்ஸ் வண்டிகள் விரைந்ததாகவும் அவர் தெரிவித்தார். "விமானப் பழுதுபார்ப்புத் தொழிற்சாலை மீது ஏராளமான ஏவு
கணைகள் தாக்கின," என்று மேயர் ஆண்டிரி சனோவ்யி கூறினார். தாக்குதல் அச்சம் காரணமாக முன்கூட்டியே பணிகள் நிறுத்தப்பட்டிருந்ததால் தொழிற்சாலையில் உயிர்ச்சேதம் எதுவும் நிகழவில்லை என்றார் அவர்.
நேற்றுக் காலை பெரிய வெடிப்புச் சத்தம் கேட்டதாக உள்ளூர்வாசி ஒருவர் ஏஎஃப்பி செய்தியிடம் தெரிவித்தார். இதற்கிடையே, உக்ரேன் நகரத்தை நோக்கி ஆறு ஏவுகணைகள் பாய்ச்சப்பட்டதாகவும் அவற்றில் இரண்டை தாங்கள் அழித்துவிட்டதாகவும் உக்ரேனிய ஆகாயப் படையின் அறிக்கை குறிப்பிட்டது. லிவிவ் என்பது உக்ரேனின் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் பெருநகரம். புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாகவும் விளங்கியது.
கடந்த வார இறுதியில் இதே நகரின் ராணுவத்தளம் மீது ரஷ்யப் படைகள் மேற்கொண்ட தாக்குதலில் 35 பேர் மாண்டனர். 130க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில், ரஷ்யப் படைகளின் ஆக்கிரமிப்பு நெருங்கிவரும் நகரங்களைச் சேர்ந்த மக்கள் அனைவரையும் ஒன்பது மனிதாபிமானப் பாதைகள் வழியாக அனுப்ப முடியும் என்று உக்ரேனிய அரசாங்கம் நம்பிக்கையுடன் தெரிவித்தது.

