உக்ரேனுக்குள் ஆயுதங்களைக் கொண்டு வந்தால் வேடிக்கை பார்க்க மாட்டோம். அவற்றை தாக்கி அழிப்போம் என்று ரஷ்யா மீண்டும் கண்டிப்புடன் கூறியுள்ளது.
போலந்து எல்லையோரமாக உள்ள உக்ரேனிய பயிற்சி நிலையத்தை பயங்கர ஏவுகணைகளுடன் தாக்கிய பிறகு ரஷ்யா இவ்வாறு எச்சரித்தது.
"நாங்கள் ஏற்கெனவே தெளிவாகச் சொல்லிவிட்டோம். உக்ரேனுக்குள் எந்தச்சரக்கு வாகனங்கள் நுழைந்தாலும் ஆயுதங்களை ஏற்றிச் செல்வதாகவே நாங்கள் நம்புவோம்," என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் நேற்று அரசாங்கம் நடத்தும் 'ஆர்டி' ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நாடுகளும் உக்ரேனுக்குள் ஆயுதங்களை அனுப்பி வைப்பதில் முனைப்புக் காட்டுவதாகக் கூறப் படுகிறது. இந்த நிலையில் ரஷ்யாவின் எச்சரிக்கை வெளியாகியுள்ளது. உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு நான்காவது வாரத்தை நெருங்கியுள்ளது.
அண்மையில் நேட்டோ அந்தப் பயிற்சி நிலையத்தை பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதன் மீதான ரஷ்யாவின் தாக்குதலில் 35 பேர் மாண்டதாக உக்ரேனிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
உக்ரேனில் உள்ள முதியோர்கள் சுரங்கப் பாதையில் உள்ள ரயில்களில் அடைக்கலம் தேடி யுள்ளனர். இரவில் ரயில் இருக்கைகளை அவர்கள் மெத்தையாக பயன்படுத்தி வருகின்றனர்.
ரஷ்யா, ஒலியின் வேகத்தை விட மிக வேகமாகப் பாயக்கூடிய அதன் ஆகப்புதிய கின்ஸாஸ் ஏவு கணைகளையும் முதன்முறையாக உக்ரேனில் பயன்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில் உக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கி அமைதிப் பேச்சுக்கு இதுவே நல்ல தருணம் என்று குறிப்பிட்டுள்ளார். இல்லையென்றால் போர் இழப்புகளிலிருந்து ரஷ்யா மீண்டு வருவதற்கு பல தலைமுறை தேவைப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
ஆனால் உக்ரேன் அமைதிப் பேச்சு வார்த்தையில் தீவிரம் காட்டியதாக இதுவரை தெரியவில்லை.
மற்றொரு நிலவரத்தில் மாஸ்கோவில் நடைபெற்ற பிரம்மாண்டக் கூட்டத்தில் ேபசிய ரஷ்ய அதிபர் புட்டின், உக்ரேனில் போரிட்டு வரும் ரஷ்ய வீரர்களைப் பாராட்டினார். லுஷ்னிகி காற்பந்து மைதானத்தில் ரஷ்ய கொடியுடன் திரண்டிருந்த ஆயிரக்கணக்கானவர் களிடம் புட்டின் உரையாற்றினார்.
"அவசியம் செய்ய வேண்டியது என்ன என்பது நமக்குத் தெரியும். அதை எந்த விலை கொடுத்தாலும் செய்து முடிப்போம்," என்று புட்டின் முழக்கமிட்டார்.
உக்ரேனுடன் இருந்த கிரைமியாவை போர் மூலம் ரஷ்யாவுடன் இணைத்து எட்டு ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் வகையில் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

