கணிசமான மீட்சியை எதிர்நோக்கி காத்திருக்கும் பயணத் துறையினர் விடிஎல் திட்டம் உதவினாலும் வருவோர் இன்னமும் குறைவு

கணிசமான மீட்சியை எதிர்நோக்கி காத்திருக்கும் பயணத் துறையினர் விடிஎல் திட்டம் உதவினாலும் வருவோர் இன்னமும் குறைவு

2 mins read

முழு­மை­யாகத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட அனைத்து பயணி­களுக்கும் எல்­லை­களைத் திறந்து­வி­ட சிங்­கப்­பூர் தயாராகிறது. இந்நிலையில் இங்கு வரும் அனைத்­து­லகப் பயணி­க­ளின் வருகை ஏறு­மு­க­மாக உள்ளது.

இருந்­தா­லும்­கூட பய­ணத்­துறை கணி­ச­மான அள­விற்கு மீட்­சி­அடை­வதை எதிர்­நோக்கி இந்­தத் துறை­யி­னர் காத்துள்ளனர்.

'விடி­எல்' எனப்­படும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்­கான பய­ணப்­பாதை ஏற்­பாட்­டின் மூலம் சிங்­கப்­பூ­ருக்கு வரு­வோ­ரில் சுற்றுப் பய­ணி­கள் மிக­வும் குறை­வாக இருக்­கி­றார்­கள்.

நண்­பர்­க­ளை­யும் உற­வி­னர்­களை­யும் பார்ப்­ப­தற்­காக வருவோரே அவர்களில் அதி­க­ம்.

இப்­படி வரு­வோர், சுற்­று­லாத் துறை­யில் செல­வி­டும் தொகை மிக­வும் குறை­வா­கவே இருக்­கும் என்­பதை இந்­தத் துறை­யி­ன­ரும் கவ­னிப்­பா­ளர்­களும் சுட்­டிக்­காட்டு­கி­றார்­கள்.

சிங்­கப்­பூ­ருக்கு கடந்த ஜன­வரி­யில் ஏறத்­தாழ 57,000 பேர் வந்­த­னர். சென்ற மாதம் வந்த அனைத்­து­லக பய­ணி­க­ளின் எண்­ணிக்கை 67,760 என்று சிங்­கப்­பூர் பய­ணத் துறைக் கழ­கத்­தின் தலைமை நிர்­வாகி கீத் டான் கூறி­ய­தாக அண்­மை­யில் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி­வித்­தது.

விடி­எல் விமானப் பய­ணத் திட்­டத்­தின்கீழ் குறு­கியகால பயணி­க­ளுக்­காக 210,000க்கும் மேற்­பட்ட அனு­ம­தி­கள் வழங்­கப்­பட்டு இருக்­கின்­றன என்­பதை திரு டான் சுட்­டிக்­காட்­டி­னார்.

சிங்­கப்­பூ­ருக்கு குறு­கிய கால வருகை மேற்­கொள்ள அதி­க­மானோர் விரும்­பு­கி­றார்­கள் என்பதை இது காட்­டு­வ­தாக அவர் தெரி­வித்­தார்.

இத­னி­டையே, கொவிட்-19 தொற்­றி­ய­தற்கு முன்பு வந்த பயணி­க­ளின் அள­வில் குறைந்­த­பட்­சம் பாதி அளவை இந்த ஆண்டில் எட்­டி­வி­ட­வேண்­டும் என்­பதே தனது இலக்கு என்று போக்­கு­வ­ரத்து அமைச்சு தெரிவித்து இருக்­கிறது.

இந்த உத்தித் திட்­டத்­தின் முக்­கிய அங்­க­மாக, முழு­மை­யாக தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர் சிங்­கப்­பூர் வரு­வ­தற்­கான கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­படும்.

முழு­மை­யாகத் தடுப்­பூசி போட்டுக்­கொண்ட அனை­வ­ரையும் மற்ற நாடு­கள் ஏற்­கெ­னவே வர­வேற்­கத் தொடங்­கி­விட்­டன என்று திரு டான் குறிப்­பிட்­டார்.

மேலும், அதிகமான சுற்­றுப் பய­ணி­கள் வரு­கைக்கு பல முனை­க­ளி­லும் பய­ணத் துறைக் கழ­கம் ஆயத்­த­மாகி வரு­வ­தாக அவர் கூறி­னார்.

இவ்­வே­ளை­யில், இதுபற்றிக் கருத்து கூறிய சிங்­கப்­பூர் தேசிய பயண முக­வர்­கள் சங்­கத்­தின் தலை­வர் ஸ்டீ­வன் லெர், அதிகமா­னோர் சிங்­கப்­பூர் வர விடி­எல் ஏற்­பாடு அனு­ம­திக்­கிறது என்றார்.

இருந்­தா­லும் உள்­நாட்டுக் கட்டுப்­பா­டு­களை மேலும் தளர்த்த வேண்­டிய தேவை இருக்­கிறது என்று தான் கரு­து­வ­தா­கவும் அவர் கூறி­னார்.