இந்தியாவில் ஆஸ்திரேலியா பெரும் முதலீடு

இந்தியாவில் ஆஸ்திரேலியா பெரும் முதலீடு

2 mins read
d65f2cda-128a-4a9a-bb58-b9abfdeff175
ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட சிலைகள் உள்ளிட்ட 29 பழங்காலப் பொருட்களை பிரதமர் மோடி நேற்று பார்வையிட்டார். தமிழகம், சீர்காழி அருகேயுள்ள தொன்மையான கோயிலின் ஞானசம்பந்தர் சிலைகள் உள்பட பல மாநிலங்களைச் சேர்ந்த அந்தப் பொருட்கள் மணற்கல், பளிங்கு, வெண்கலம், பித்தளை, காகிதம் போன்ற பொருட்களால் ஆனவை. இதில் ஆகப் பழமை யானது கி.பி 9-10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 'சிவ பைரவர்' மணற்கல் சிலையாகும். படம்: இந்திய ஊடகம் -

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனும் நேற்று உச்சநிலை மாநாட்டில் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து இந்தியாவில் மிகப் பெரிய அளவில் ஆஸ்திரேலியா முதலீடு செய்ய உள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலியா இருதரப்பு இரண்டாவது உச்சநிலை மாநாடு நேற்று காணொளி மூலம் நடைபெற்றது.

இந்தியாவில் சுமார் 280 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் (ரூ.1,560 கோடி ரூபாய்) முதலீட்டு திட்டத்தை ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ளது.

மெய்நிகர் கூட்டத்தில் வட்டார, அனைத்துலக பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் பேச்சு நடத்தினர்.

இந்தியா-ஆஸ்திரேலியா உறவுகளின் முக்கிய அம்சங்கள் பற்றிக் குறிப்பிட்ட மோடி, இரு தரப்புக்கும் பொருளியல் மறுமலர்ச்சிக்கும் பொருளியல் பாதுகாப்பிற்கும் விரிவான பொருளியல் ஒத்துழைப்பு ஒப்பந்தம் (CECA) முக்கியமானதாக இருக்கும் என்றார்.

முதல் உச்சநிலை மாநாடு 2020 ஜூன் 4ஆம் தேதி நடைபெற்றபோது இருநாடுகளுக்கும் இடையிலான உறவு விரிவான உத்திபூர்வ பங்காளித்துவத்துக்கு உயர்த்தப்பட்டது.

வர்த்தக, முதலீட்டு உறவுகளை ஆழப்படுத்துவதுடன், ராணுவம், பாதுகாப்பு, அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றில் இரு நாடுகள் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் பேசியதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

"முக்கியமான கனிமங்கள், நீர் மேலாண்மை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கொவிட்-19 ஆய்வுகள் போன்ற பல துறைகளில் இருநாட்டு ஒத்துழைப்பும் வேகமாக வளர்ந்துள்ளது," என்று மோடி கூறினார்.

இரு நாடுகளுக்கும் இடையேயான முதலீட்டை அதிகரிக்க இரு நாட்டுப் பிரதமர்களும் இணங்கியுள்ளதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் ஹர்ஷ்வர்த்தன் கூறியுள்ளார். இரு பிரதமர்களின் பேச்சு வார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர் களிடம் அவர் பேசினார்.

இந்தியாவின் உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஆஸ்திரேலியாவின் முதலீட்டை ஈர்க்க வரிச்சலுகை அளிக்க இந்தியா முன்வந்துள்ளதாகவும் அவர் சொன்னார்.

'குவாட்' அமைப்பிலும் இரு நாடுகளுக்கும் நல்ல ஒத்துழைப்பு உள்ளது. இந்த ஒத்துழைப்பு, தாராள, திறந்த, அனைத்து நாடுகளையும் உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் மீதான இரு நாட்டின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

'குவாட்' வெற்றியானது வட்டார, உலகளாவிய நிலைத்தன்மைக்கு முக்கியமானது," என்று மோடி மேலும் தெரிவித்தார்.

ரஷ்யா-உக்ரேன் போரில் இந்தியாவின் நிலைப்பாட்டை 'குவாட்' நாடுகள் ஏற்றுக்கொண்டதாக ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நான்கு நாடுகள் 'குவாட்' அமைப்பில் இடம் பெற்றுள்ளன.

இந்தியாவின் 29 தொன்மையான பொருட்களைத் திருப்பித் தந்ததற்காக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுக்கு மோடி நன்றி தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையே வருடாந்திர உச்சநிலை மாநாட்டு செயல்முறைகளை நிறுவியதில் மகிழ்ச்சி அடைவதாக மோடி கூறினார். உச்சநிலை மாநாட்டில் "நமஸ் காரம்" என்று தனது பேச்சைத் தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி,

ஆஸ்திரேலியாவின் குவின்ஸ்லாந்து, நியூ சவுத் வேல்ஸ் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம், சேதங்களுக்காக தனது அனுதாபங்களை மோடி தெரிவித்துக்கொண்டார்.