சிங்கப்பூரில் ஒருகாலத்தில் பொருந்தாது என்று கருதப்பட்ட அணுவாற்றல், 2050ஆம் ஆண்டுக்குள் நாட்டிற்கு மின்சாரம் அளிக்கக்கூடியதாக கண்டறியப்பட்டுள்ளதாக நேற்று வெளியிடப்பட்ட புதிய அறிக்கை ஒன்று தெரிவித்தது.
எரிசக்திச் சந்தை ஆணையம் தயாரித்துள்ள அந்த அறிக்கை, நாட்டின் மின் தேவையில் கிட்டத்தட்ட 10 விழுக்காட்டை 2050ஆம் ஆண்டுக்குள் அணுவாற்றல் பூர்த்தி செய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளது.
மேலும், அணுவாற்றல் தொழில்நுட்பத்தின் நவீனமுறை அந்த ஆற்றலைப் பாதுகாப்பானதாகவும் நம்பத்தகுந்ததாகவும் பராமரிக்க உதவும் எனவும் அறிக்கை கூறியது.
சிங்கப்பூரில் அணுவாற்றலைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் மூன்று விதமாகக் கண்டறியப்பட்டுள்ளதாக 'எரிசக்தி 2050 குழு' என்னும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
பருவநிலை இலக்குகளை அடைய நாடுகள் ஒன்றிணைந்து பணியாற்றுவதை வெவ்வேறு நாட்டின் வெவ்வேறு தன்மை கடினமாக்கி உள்ளது. வட்டார அளவில் மின் உற்பத்தி மெதுவடைந்து வருவதால் சிங்கப்பூரின் எரிசக்தித் தேவைக்கான மின்சார இறக்குமதியின் பங்கு வரம்புக்குள் இருக்கும் என அறிக்கை தெரிவித்தது. இது ஒரு விதம்.
வேறு இரண்டு விதங்களைப் பார்க்கையில், சிங்கப்பூரின் எரிசக்தித் தேவைக்கு மின்சார இறக்குமதி முக்கிய பங்காற்றுகிறது.
அந்த வகையில், பருவநிலை தொடர்பான நடவடிக்கைகளையும் தொழில்நுட்பத்தையும் நவீனப்
படுத்த நாடுகள் விரைந்து ஒன்றிணைவது ஒரு போக்கு.
அதேநேரம் கொவிட்-19 கொள்ளைநோயில் இருந்து மீட்சி காண அதிக காலம் தேவைப்படுதால் தொழில்நுட்ப நவீனமயம் தடைபட்ட நிலையில் நாடுகள் ஒன்றுக்கொன்று ஒத்துழைக்கும் போக்கு என்று அறிக்கை விளக்கி உள்ளது.
"2012ஆம் ஆண்டுவாக்கில் அரசாங்கம் மேற்கொண்ட ஆய்வின்படி அணுவாற்றல் கிடைக்கும் நிலையிலும் அதனை இங்கு அமைப்பது பொருத்தமாகாது என்று வெளியிடப்பட்டது.
"ஆனால், அந்தக் காலகட்டத்திற்குப் பிறகு அணுவாற்றல் தொழில்நுட்பம் மேம்பட்டு வந்துள்ளது. பல நாடுகளில் புதிய அணுவாற்றல் தொழிற்சாலைகள் வடிவமைக்கப்பட்டு சோதிக்கப்பட்டு வருகின்றன. தற்போது இயங்கும் மின் உற்பத்தி நிலையங்களைவிட அணுவாற்றல் உற்பத்தி நிலையங்கள் பாதுகாப்பைத் தரக்கூடிய வாய்ப்பு உள்ளது.
"சீனா, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளில் அணுவாற்றல் உற்பத்தி நிலையங்களைக் காணலாம்.
"சிங்கப்பூர் அதன் மின்சாரத் துறையின் கரிமக் குறைப்பில் வரம்புக்கு உட்பட்ட தெரிவுகளைக் கொண்டிருப்பதால், எரிசக்திச் சந்தை ஆணையம், அணுவாற்றல் தொழில்நுட்பங்களை இங்கு நிறுவு வது தொடர்பான அம்சங்களை தீவிரமாக ஆராயந்து வருகிறது," என்று அறிக்கை விவரிக்கிறது.
இவ்வாறு அணுவாற்றலைப் பரிசீலிக்கலாம் என அரசாங்கம் முடிவெடுத்திருப்பதற்கு உலக எரிசக்தி நெருக்கடி ஒரு காரணமா என்று கடந்த ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தில் வினவப்பட்டது.
அதற்கு அப்போது பதிலளித்த வர்த்தக தொழில் இரண்டாம் அமைச்சர் டான் சீ லெங், நவீன அணுவாயுத உலைத் தொழில்நுட்பங்களையும் வடிவமைப்புகளையும் தமது அமைச்சு கவனித்து வருவதாகத் தெரிவித்தார்.
"விரைவாக ஏற்படுத்தக்கூடிய சிறிய வகை அணு உலைகளும் கவனிக்கப்படுகின்றன. பெரிய அணு உலைகளை ஏற்படுத்த சாத்தியமற்ற இடங்களில் இவற்றை அமைக்கலாம்," என்று கூறினார்.
இவற்றில் பல இன்னும் ஆராய்ச்சி அளவிலேயே இருப்பதாகவும் வர்த்தக நடவடிக்கைகளை இனிதான் தொடங்க வேண்டும் என்றும் அப்போது அவர் குறிப்பிட்டிருந்தார். கடந்த 2014ஆம் ஆண்டு அணு வாற்றல் பாதுகாப்பு தொடர்பான ஆராய்ச்சி மற்றும் கல்வித் திட்டத்தைத் தொடங்க சிங்கப்பூர் $63 மில்லியனை ஒதுக்கியது.
பல்வேறு வர்த்தக, சிறிய அணு உலைகளின் வடிவமைப்புகள் வெளிநாடுகளில் உருவாக்கப்பட்டு 2030ஆம் ஆண்டுவாக்கில் உலக அளவில் கிடைக்கக் கூடும் என்றும் அறிக்கை தெரிவித்துள்ளது.
2050ஆம் ஆண்டுக்குள் பயன்படுத்துவது பற்றி சிங்கப்பூர் ஆராயும்

