எரிபொருளையும் வீட்டு சமையலுக்குத் தேவைப்படும் மண்ணெண்ெணய்யையும் வாங்க இலங்கை மக்கள் அலைமோதுகின்றனர். அவர்கள் அதற்காக நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய் வாங்கக் காத்திருந்தபோது மூன்று முதியோர் மாண்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நேற்று முதல் ராணுவப் படையினர் நிறுத்தப்பட்டனர். இதற்கான உத்தரவை இலங்கை அரசு பிறப்பித்துள்ளது.
அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் திடீரென்று ஏற்றப்பட்டதைத் தொடர்ந்தும் அத்தகைய பொருள்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு வருவதைத் தொடர்ந்தும் மக்கள் பதற்றமடைந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது.
வரிசையைக் கட்டுப்படுத்தி எரிபொருள் விநியோகம் சீராக நடைபெறுவதைக் கண்காணிக்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு நிலையத்திலும் தலா இரு வீரர்கள் வீதம் நிறுத்தப்பட்டுள்ளதாக ராணுவப் படையின் பேச்சாளர் நிலந்தா பிரேமரத்ன தெரிவித்தார்.
இது பொதுமக்களுக்கு உதவுவதற்கான நடவடிக்கை என்று அரசாங்கப் பேச்சாளர் ரமேஷ் பத்திரண கூறினார்.
இலங்கையின் அந்நியச் செலா வணிக் கையிருப்பு, வரலாற்றில் இல்லாத அளவுக்குக் குறைந்து விட்டதால் இறக்குமதிக்குப் பணம் செலுத்த அந்த நாடு திண்டாடி வருகிறது. அதனால், உதவி கேட்டு பல நாடுகளையும் இலங்கை அணுகி வருகிறது.

