சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையில் பயணங்களை முழுமையாகத் தொடங்க ஏதுவாக செயல்பட இரு நாடுகளும் ஒப்புக்கொண்டு இருக்கின்றன.
முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்குத் தரை, விமானப் பயணங்களை முழுமையாகத் தொடங்குவதன் தொடர்பில் தாங்கள் உடனடியாகச் செயல்பட முடியும் என்று இரு நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் கூறியுள்ளனர்.
தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கு தரை, விமானப் பயணங்களை முற்றிலும் தொடங்குவதற்கு இரு நாடுகளும் செயல்பட இது தக்க தருணம் என்று சிங்கப்பூரின் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நேற்று ஃபேஸ்புக்கில் தெரிவித்தார்.
மலேசிய சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீனும் டுவிட்டரில் நேற்று இதனை குறிப்பிட்டார். திரு ஓங், நேற்று முதல் வரும் வெள்ளிக்கிழமை வரை மலேசிய பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.
அவருடன் சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரிகளும் சென்று இருக்கிறார்கள். திரு ஓங், மலேசிய சுகாதார அமைச்சரை சந்தித்தார். பிறகு பல விவரங்களை அவர் தெரிவித்தார்.
"நாங்கள் இருவரும் பயனுள்ள முறையில் மனம் திறந்து விவாதித்தோம். சிங்கப்பூரும் மலேசியாவும் அருமையான, நீண்ட நெடுங்கால இருதரப்பு உறவை அனுபவித்து வருகின்றன.
"இரு நாட்டு மக்களுக்கும் இடையில் பல தொடர்புகளும் உறவும் உள்ளன. ஆனால் இவை கொவிட்-19 காரணமாக பாதிப்புக்கு உள்ளாகிவிட்டன," என்று திரு ஓங் குறிப்பிட்டார். கொரோனா சூழ்நிலை நிலைப்பட்டுள்ளது. இரு நாடுகளிலும் சூழ்நிலை மேம்பட்டு வருகிறது.
"ஆகையால் விமானம், தரைப் பயணங்களை மீண்டும் தொடங்குவதற்கு ஏதுவாக இப்போது நாம் செயல்பட வேண்டும்," என்று திரு ஓங் கூறினார்.
தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான விமான, தரைப் பயணங்கள் மீண்டும் தொடங்கினால் இரு நாட்டு மக்களுக்கும் இடையில் தொடர்புகள் மறுபடியும் பலமடையும் என்று அவர் தெரிவித்தார்.
முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கு ஏப்ரல் 1 முதல் தன் எல்லை களைத் திறந்துவிட மலேசியா ஆயத்தமாகி வருகிறது. சிங்கப்பூரும் மலேசியாவும் கடந்த நவம்பரில் தரை, விமானப் பயணங்களை தொடங்கின. என்றாலும் பயணிகளுக்கு வரம்பு விதிக்கப்பட்டது.
சிங்கப்பூர் முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்ட சுற்றுப்பயணிகளுக்குத் தன் எல்லைகளை மேலும் திறந்துவிட திட்டமிடுவதாக போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் இம்மாதத் தொடக்கத்தில் அறிவித்தார்.
இப்போது 32 நாடுகளில் இருந்து முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளை சிங்கப்பூர் அனுமதிக்கிறது. அப்படி சிங்கப்பூர் வருவோர், தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டாம்.

