மார்ச் 31ஆம் தேதி இரவு 11.59 மணியிலிருந்து, கொவிட்-19க்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் அனைவரும் 12 மற்றும் அதற்கு குறைந்த வயதுடைய சிறுவர்களும் வெறும் புறப்பாட்டிற்கு முந்தைய கொவிட்-19 பரிசோதனை முடிவுடன் சிங்கப்பூருக்கு வரலாம்.
தனிமை உத்தரவின்றி சிங்கப்பூருக்கு வர, பிரத்தியேக 'விடிஎல்' விமானங்களில் மட்டுமே ஏறவேண்டும் என்ற கட்டாயம் இனி அவர்களுக்கு இருக்காது.
மேலும், சிங்கப்பூர் வந்திறங்கிய 24 மணி நேரத்திற்குள் ஆன்டிஜன் விரைவு பரிசோதனை (ஏஆர்டி) எடுக்க வேண்டிய கட்டாயமும் இனி இருக்காது.
சிங்கப்பூருக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையில் இனி வரம்பும் விதிக்கப்படாது. தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள், சிங்கப்பூருக்கு வருவதற்கு நுழைவு அனுமதியையும் (Vaccinated Travel Pass) பெற தேவையில்லை.
சிங்கப்பூர் அதன் எல்லைகளை மீண்டும் திறப்பதில் மிகவும் உறுதியான நடவடிக்கை இதுவாகும்.