கொவிட்-19க்கு எதிராக முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் ஏப்ரல் 1 முதல் சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே தரைவழி பயணம் மேற்கொள்ளலாம்.
வாகனமோட்டிகள் தங்களது கார்களிலும் பயணம் செய்ய முடியும். அவர்கள் கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ளவோ தனிமைப்படுத்திக்கொள்ளவோ தேவையில்லை.
இதன்மூலம், இரு நாடுகளுக்கும் இடையே குறுகியகால பயணங்கள் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய பயணங்களே இரு நாடுகளுக்கு இடையிலான பயணங்களில் முன்பு பெரும் பங்கு வகித்தன.
இது தொடர்பில் மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புடன் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் இன்று வியாழக்கிழமை (மார்ச் 24) காலை தொலைபேசியில் பேசினார்.
அதைத் தொடர்ந்து தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட பிரதமர் லீ, "கொவிட்-19 தொற்றைச் சமாளிப்பதில் இருதரப்பும் நல்ல முன்னேற்றம் கண்டுள்ள வேளையில், நமது நில எல்லையை மேலும் திறப்பதற்கான சரியான நேரம் இது," எனக் கூறினார்.
சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே பயணங்களை மீண்டும் தொடங்குவதில் இது முக்கிய மைல்கல் என்று மலேசியப் பிரதமர் இஸ்மாயில் கூறினார்.
சிங்கப்பூர்-மலேசியா எல்லைக் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படுவதால், கிட்டத்தட்ட கொவிட்-19க்கு முந்தைய நிலைக்குப் போக்குவரத்து திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.


