அனைத்துலக அளவில் காணப்படும் நிலவரங்களுக்கு ஏற்ப சிங்கப்பூர் தன்னை மாற்றிக்கொண்டு பொருளியல் வளர்ச்சிக்குப் பங்காற்ற வேண்டும். அதே சமயம், சமுதாயம் பலன் அடைவதையும் நாடு உறுதிப்படுத்திட வேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் தனது புதிய அனைத்துலக தலைமையகத்தை நிறுவியிருக்கும் டைசன் நிறுவனம் நேற்று அதைச் சிறப்பிக்கும் விழாவை நடத்தியது. அதில் பிரதமர் லீ கலந்துகொண்டார்.
சிங்கப்பூரில் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு டைசன் நிறுவனம் $1.5 பில்லியன் முதலீடு செய்யவுள்ளது. அத்துடன் அதன் ஆய்வு, மேம்பாட்டுக் குழுவில் மேலும் 250க்கும் மேற்பட்ட பொறியாளர்கள், விஞ்ஞானிகள் ஆகியோரை நிறுவனம் சேர்க்கவுள்ளது.
இதனால், இங்குள்ள ஊழியர்களுக்கு உற்சாகம் தரக்கூடிய வேலை வாய்ப்புகள் காத்திருப்பதாக திரு லீ குறிப்பிட்டார். மேலும், அனைத்துலகச் சந்தைக்காக புதிய பொருள்களைத் தயாரிக்கும் சாத்தியம் சிங்கப்பூருக்கு இருக்கும் என்றார். சிறிய நாடாக இருப்பதால், முதலீடுகளில் போட்டித்தன்மை, புவிசார் அரசியல் நெருக்கடிகள், விநியோகத் தொடர்கள் போன்ற அம்சங்களில் அனைத்துலக ரீதியாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவது சிங்கப்பூருக்குச் சவாலாக இருக்கலாம்.
ஆனால், போட்டித்தன்மை மிக்கதாக சிங்கப்பூர் தன்னை மாற்றிக்கொள்ள முடியும், மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார் திரு லீ. இதன் மூலமாக சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சி காணும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த வளர்ச்சி, அனைவரையும் உள்ளடக்கியதாகவும் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் பலன் அளிப்பதாகவும் இருப்பதை சிங்கப்பூர் உறுதிப்படுத்தும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
எல்லைகளைத் திறப்பது, வர்த்தகத் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வது என்று மட்டும் இல்லாமல், பிறருடன் இணைப்பை ஏற்படுத்திக்கொள்ளும் இயல்பு சிங்கப்பூர் மக்களின் பண்பிலும் இருக்க வேண்டும் என்றார்.
"புதிய யோசனைகளையும் திறனாளர்களையும் வரவேற்பது, மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள எந்நேரமும் தயாராக இருப்பது, மாற்றங்களை ஏற்றுக்கொள்ளவோ முன்னேற்றம் காணவோ தயங்காமல் இருப்பது போன்றவை நம் சமுதாயத்தின் நெறிமுறைகளாக இருக்க வேண்டும்," என்று அவர் சுட்டினார்.
வெவ்வேறு நாடுகளிலிருந்து தலைசிறந்த விஞ்ஞானிகள், வடிவமைப்பாளர்கள், பொறியாளர்கள் ஆகியோரை வரவழைத்து பலதரப்பட்ட யோசனைகளையும் கலாசாரங்களையும் ஏற்றுக்கொண்டு, சிங்கப்பூருக்கென ஒரு தனி பாணியை ஏற்படுத்தியதன் மூலம் நாடு கட்டமைக்கப்பட்டது.
எனினும், வெளிநாட்டவர் சிங்கப்பூர் வந்து வேலை செய்ய வேண்டாம் என்று வேலி போடத் தூண்டும் ஒவ்வொருவர் எண்ணமும் நம்மையே பின்னாளில் பாதிக்கும் என்றார் திரு லீ.
பொருளியல் வளர்ச்சி காணாது, வேலை வாய்ப்புகள் சிங்கப்பூரர்களுக்கு அதிகம் இல்லாத நிலை ஏற்பட்டால் நாட்டின் நீண்டகால வாய்ப்புகளும் அபாய நிலைக்குத் தள்ளப்படும் என்றார் அவர்.
தொழில்துறை பங்காளிகள், ஆய்வாளர்கள், அரசாங்க அமைப்புகள் போன்ற வெவ்வேறு தரப்பினருடன் சிங்கப்பூர் இணைந்து புத்தாக்க கலாசாரம் ஒன்றைத் தொடர்ந்து உருவாக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
குறிப்பாக அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய பிரிவுகளில் திறனாளர்களை வரவேற்கவும் உருவாக்கவும் சிங்கப்பூர் தொடர்ந்து பாடுபடும் என்றார்.
கிட்டத்தட்ட 110,000 சதுர அடி பரப்பளவு உள்ள தேசிய நினைவுச் சின்னமான செயிண்ட் ஜேம்ஸ் பவர் ஸ்டேஷனில் டைசன் நிறுவனத்தின் புதிய தலைமையகம் அமைந்துள்ளது.
மேலும் செய்தி - பக்கம் 2

