சிங்கப்பூரர்கள் அடுத்த வாரம் மலேசியாவுக்குப் பயணம் மேற்கொள்ளத் தயாராகிவரும் வேளையில், வரும் நாள்களிலும் வாரங்களிலும் மலேசிய ரிங்கிட்டுக்கான தேவை அதிகரிக்கும் என நாணய மாற்று வணிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
வரும் வாரங்களில் அந்நிய நாணயங்களுக்கான தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கு சிங்கப்பூர்-மலேசியா எல்லை ஏப்ரல் 1ஆம் தேதி மீண்டும் திறக்கப்படுகிறது.
சிங்கப்பூர் வெள்ளிக்கு எதிராக மலேசிய ரிங்கிட், தாய்லாந்து பாட், யூரோ நாணயங்களின் மதிப்பை வாடிக்கையாளர்கள் கேட்டு வருவதாக நாணய மாற்று வணிகர்கள் கூறுகின்றனர்.
வரும் நாள்களில் வாடிக்கையாளர்கள் நாணய மாற்று வணிகங்களுக்குப் படையெடுப்பர் என எதிர்பார்க்கப்படுவதால், தங்களிடம் ரிங்கிட்டின் இருப்பை வணிகர்கள் அதிகப்படுத்தி வருகின்றனர்.

