வெளிநாட்டு ஊழியர்களுக்குத் தீர்வை கழிவு ஜூன் வரை நீட்டிப்பு

வெளிநாட்டு ஊழியர்களுக்குத் தீர்வை கழிவு ஜூன் வரை நீட்டிப்பு

2 mins read
508ff0f1-e36d-4450-805c-a2456bce4706
-

கட்டுமானம், கப்பல் பட்டறை, பதனீட்டுத் தொழில்துறைகளில் வேலை பார்க்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு முதலாளிகள் செலுத்த வேண்டிய தீர்வையில் கொடுக்கப்படும் தள்ளுபடி மேலும் மூன்று மாதத்திற்கு நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தத் தள்ளுபடி ஏப்ரல், மே மாதத்திற்கு $250 ஆகவும் ஜூன் மாதத்திற்கு $200 ஆகவும் இருக்கும். தேசிய வளர்ச்சி அமைச்சும் மனிதவள அமைச்சும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 27) இதனை அறிவித்தன.

இந்தத் தொழில்துறைகளில் ஊழியர் பற்றாக்குறை தொடர்ந்து நிலவுகிறது. செலவும் அதிகரித்து இருக்கிறது. இந்தச் சுமைகளைப் போக்க உதவும் வகையில் பல்வேறு ஆதரவு நடவடிக்கைகள் நீட்டிக்கப்பட்டு இருக்கின்றன.

இதன் ஒரு பகுதியாக தீர்வைத் தள்ளுபடியும் நீட்டிக்கப்படுகிறது என்று இந்த அமைச்சுகள் குறிப்பிட்டன. இத்தகைய ஆதரவுத் திட்டங்கள் இந்த மாத முடிவில் முடிவடைய இருந்தன.

வெளிநாட்டு ஊழியர்களை வேலையில் வைத்திருக்கும் முதலாளிகள் செலுத்த வேண்டிய தீர்வையில் தள்ளுபடி சலுகை 2020ல் நடப்புக்கு வந்தது.

கொவிட்-19 காரணமாக ஏற்பட்ட சவால்களைச் சமாளிக்கவும் நிறுவனங்களுக்கு உதவவும் தீர்வை ரத்து அமலானது.

அது தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்கு முதலாளிகள் செலுத்த வேண்டிய தீர்வையில் அளிக்கப்படும் தள்ளுபடி கொஞ்சம் குறைவாக இருக்கும்.

இந்தத் துறைகளில் ஊழியர் நிலவரம் மேம்பட்டு வருவதே இதற்கான காரணம் என்று கூட்டறிக்கையில் அமைச்சுகள் தெரிவித்தன. அதற்கேற்ப மனிதவள செலவும் மிதமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூழ்நிலையை அரசாங்கம் தொடர்ந்து கவனிக்கும். வரும் ஜூன் மாதம் மேலும் தள்ளுபடியை நீட்டிப்பதா என்பது பற்றி அது முடிவு செய்யும் என்று கூட்டறிக்கை தெரிவித்தது. வெளிநாட்டு ஊழியர் தீர்வை தள்ளுபடி ஒரு தற்காலிக ஆதரவாக கொடுக்கப்படுகிறது.

நிறுவனங்கள் நீண்டகால உற்பத்தித்திறன் மேம்பாடுகளில் கவனம் செலுத்தும்படி ஊக்கமூட்டப்படுகின்றன என்றும் கூட்ட றிக்கை தெரிவித்தது.

மனிதவள ஆற்றலை குறைத்துக்கொண்டு எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய ஊழியர் பற்றாக்குறைக்கு எதிராக தங்களைத் தற்காத்துக்கொள்ளும் வகையில் நிறுவனங்கள் ஆயத்தமாக வேண்டும் என்றும் அது குறிப்பிட்டது.

கொவிட்-19 (தற்காலிக நடவடிக்கைகள்) சட்டத்திற்குட்பட்ட ஓர் அம்சமும் நீட்டிக்கப்படும் என்று கூட்டறிக்கை தெரிவித்தது.

கொவிட்-19 தொடர்பான காரணங்களால் ஏற்படக்கூடிய வெளிநாட்டு ஊழியர் சம்பள உயர்வை கவனத்தில் கொள்ளும் வகையில் ஒப்பந்த தொகையைச் சரிசெய்ய ஏதுவாக மதிப்பீட்டாளர் ஒருவரிடம் இருந்து அதிகாரபூர்வமான உறுதிமொழி ஒன்றைக் குத்தகைதாரர்கள் பெறுவதற்கு அந்த அம்சம் அனுமதி அளிக்கிறது.

இந்தச் சலுகைக்காலம் இம்மாதத்துடன் முடிவடைய இருந்தது.

இது மேலும் மூன்று மாதங்களுக்கு-அதாவது ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.