உலகில் சகித்துக்கொள்ள முடி யாத அளவுக்கு இரைச்சல் மிக்க நகரங்களின் பட்டியலை ஐநா சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்டு உள்ளது. 'வருடாந்திர முன்னணி அறிக்கை 2022' என்ற அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள இரைச்சல்மிக்க நகர்களில் ஐந்து இந்திய நகர்கள் இருக்கின்றன.
உலகிலேயே பங்ளாதேஷ் தலைநகர் டாக்காவில்தான் இரைச்சல் அதிகம் (119 டெசிபல்) என்று அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மொரோதாபாத் நகரம் இரண்டாவது இடத்தில் (114 டெசிபல்) உள்ளது.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரத்தில் இரைச்சலின் அளவு 105 டெசிபல் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்தியாவைச் சேர்ந்த புதுடெல்லி, கோல்கத்தா, அசன்சால், ஜெய்ப்பூர் ஆகிய இதர நான்கு நகர்களும் பட்டியலில் இரைச்சல்மிக்க நகர்களாக உள்ளன.
உலகிலேயே ஆக அதிக இரைச்சல்மிக்க 15 நகர்களில் மூன்று நகர்கள் அதாவது மொரோ தாபாத், கோல்கத்தா, அசன்சால் ஆகியவை இந்தியாவில் உள்ளன.
இந்த 15 நகர்கள் பட்டியலில் 10வது நகராக அமெரிக்காவின் நியூயார்க் (95 டெசிபல்) இடம் பெற்று இருக்கிறது.
உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டி நெறிமுறைகளின்படி இரைச்சலைப் பொறுத்தவரை 55 டெசிபல் என்பது வெளிப்புற குடியிருப்புப் பகுதிகளில் அனுமதிக்கத்தக்க அளவாகும்.
வர்த்தக வட்டாரங்கள், போக்குவரத்து வட்டாரங்களில் இந்த அளவு 70 டெசிபல் வரை இருக்கலாம். இந்த அளவுக்கு மேலாக இரைச்சல் உள்ள இடங்களில் தொடர்ந்து அதிக காலத்திற்கு ஒருவர் இருந்து வந்தால் அவருக்குக் காது கேளாத பிரச்சினை ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது.

