உலகெங்கும் பல நாடுகளில் கொவிட்-19 பரவல் கட்டுக்குள் வந்துள்ளதையடுத்து, ஈராண்டுகளுக்குப் பிறகு வழக்கமான அனைத்துலக விமானச் சேவைகளை இந்தியா மீண்டும் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், நாட்டின் சுற்றுப்பயணத் துறையை மீட்சியடையச் செய்யும் நோக்கில், வெளிநாட்டுப் பயணிகளுக்கு இலவச சுற்றுப்பயண விசா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 500,000 பேருக்கு இலவச விசா வழங்கப்படும் என்று மத்திய சுற்றுப்பயணத் துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு விசா பெறும் நடைமுறையை எளிமையாக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 27) ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் அவர் சொன்னார்.
"எனவே, 170 நாடுகளில் வசிப்போர், விசா பெற இந்தியத் தூதரகத்துக்குச் சென்று வரிசையில் நிற்கத் தேவையில்லை. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், இணையத்தில் விண்ணப்பம் செய்வதே. உங்களுக்கு இ-விசா வழங்கப்படும்," என்று அவர் விவரித்தார்.


