உக்ரேனின் செர்னிஹிவ், கியவ் நகர்களைச் சுற்றிய பகுதிகளில் ராணுவ நடவடிக்கைகளை ரஷ்யா குறைத்துக்கொள்ளும் என்று ரஷ்யத் தற்காப்பு துணை அமைச்சர் அலெக்சாண்டர் ஃபோமின் கூறியிருக்கிறார்.
உக்ரேன்-ரஷ்யா இடையே 34வது நாளாக சண்டை நீடித்த நிலையில் இரு நாட்டுப் பேராளர்கள் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 29) நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து திரு ஃபோமின் இதனைத் தெரிவித்திருக்கிறார்.
இருநாடுகளுக்கு இடையே பரஸ்பர நம்பிக்கையையும் அடுத்தகட்ட பேச்சு வார்த்தைகளுக்குத் தேவையான நிபந்தனைகளையும் உருவாக்கும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதேபோல, தனது பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இருந்தால் அணி சேராமல் நடுநிலை வகிக்கத் தயார் என்று உக்ரேன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
போலந்து, இஸ்ரேல், துருக்கி, கனடா ஆகிய நாடுகள் உக்ரேனுக்குப் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கும் நாடுகளாகச் செயல்படும் சாத்தியம் உள்ளது.
பேச்சுவார்த்தைக்குமுன் இரு நாட்டுப் பேராளர்களும் கைகுலுக்கவில்லை என்று உக்ரேன் தொலைக்காட்சி தெரிவித்தது.
கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரேன்மீது ரஷ்யா படையெடுத்த நிலையில், பேச்சுவார்த்தையில் அமைதித் தீர்வு எட்டப்பட வாய்ப்பு மிகக் குறைவு எனக் கூறப்பட்டது.
போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதும் தனது இறையாண்மையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது என்பதும் உக்ரேனின் நிலைப்பாடாக இருக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
அதேபோல, உக்ரேன் அணி சேராமல் நடுநிலை வகிக்க வேண்டும் என்பது ரஷ்யாவின் கோரிக்கை. சில நிபந்தனைகளுடன் அக்கோரிக்கையை ஏற்கத் தயார் என்று உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி கூறியுள்ளார்.


