கி. ஜனார்த்தனன்
ஆ. விஷ்ணு வர்தினி
கொவிட்-19 அபாயம் இன்னும் அகலவில்லை, அதனால் முன்னெச்சரிக்கையைத் தொடர்வதே நல்லது என்பதை வெளிப்புறங்களில் நடமாடியோரின் முகக்கவசத்தால் மூடப்பட்ட முகங்கள் காட்டின.
நேற்று முதல் வெளிப்புறங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமல்ல என்று இம்மாதம் 24ஆம் தேதி நாட்டு மக்களிடம் நேரடி உரையாற்றியபோது பிரதமர் லீ சியன் லூங் அறிவித்தார்.
இருப்பினும், சுற்றியிருப்போரின் நலனுக்காக முகக்கவசம் அணிவது நல்லது என்று லிட்டில் இந்தியாவிற்கு வந்திருந்த பலரும் தமிழ் முரசிடம் தெரிவித்தனர்.
"எனக்கு ஒரு வயதில் மகனும் வயதான பெற்றோரும் உள்ளனர். அவர்களை கொரோனா தொற்றும் அபாயம் அதிகம். அதனால் அவர்களின் பாதுகாப்பு கருதி, வெளியே செல்லும்போது தொடர்ந்து முகக்கவசம் அணிவேன்," என்றார் தாதியாகப் பணிபுரியும் திருவாட்டி சிந்து சுசீலா, 31.
கூட்டம் மிகுதியாக இருக்கும் தேக்கா போன்ற இடங்களில் முகக்கவசம் அணிவது நல்லது என்றார் வணிகரான சுசீலா கேசவன், 45.
கடந்த ஈராண்டுகளாக முகக்கவசம் அணிந்து வருவதால் சிலருக்கு அது ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டது.
"இப்பழக்கத்தைச் சட்டெனக் கை விடுவது கடினம். ஓரிரு வாரங்களுக்குப் பின் நிலைமை சீரானால் முகக்கவசம் அணியாமல் வெளியே செல்லத் தயங்க மாட்டேன்," என்றார் திரு தீபக் ஜேசன், 39.
தமிழ் முரசு லிட்டில் இந்தியாவில் நேற்று கண்டவர்களில் ஒரு சிலரே முகக்கவசம் அணியவில்லை. அவர்களில் இயந்திரப் பராமரிப்புப் பணியாளரான கவுசர் ஷேக்கும் ஒருவர்.
"முகக்கவசம் அணிந்தால் மூச்சு முட்டுகிறது. சிங்கப்பூரில் பலரும் தடுப்பூசி போட்டுவிட்டனர். அதனால் நம்பிக்கையோடு முகக்கவசத்தை அகற்றலாம்," என்றார் 25 வயதான ஷேக்.
உணவகங்களில் நேற்று முதல் ஒரே குழுவாக பத்துப் பேர் சேர்ந்து உண்ணும் வகையில் விதி தளர்த்தப்பட்டு இருப்பதைப் பலரும் வரவேற்றனர்.
"வெகுநாள்களுக்குப்பின் இரண்டு குடும்பங்கள் ஒன்றாக உண்ணும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நிச்சயமாக உறவினர்களுடன் சேர்ந்து வருவோம்," என்றனர் பனானா லீஃப் அப்போலோ உணவகத்தில் நேற்று நண்பகல் உணவருந்திய ராமச்சந்திரன் மாதவன் - கோவிந்தராஜு சியாமளா இணையர்.

