மருந்துப்பொருள்கள் மற்றும் மருத்துவச் சாதனங்கள் பற்றாக்குறையால் முன்னர் திட்டமிட்டிருந்த அனைத்து அறுவை சிகிச்சைகளையும் தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக இலங்கையின் பேராதனை போதனை மருத்துவமனை நேற்று முன்தினம் அறிவித்தது.
அவசரகால மற்றும் உயிர்காப்ப அறுவை சிகிச்சைகளுக்குத் தேவையான மருத்துவச் சாதனங்களையும் மருந்துப் பொருள்களையும் சேமிக்க வேண்டி, இம்முடிவு எடுக்கப்பட்டதாக பேராதனை மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் எச்.எம்.அர்ஜுன திலகரத்ன தெரிவித்தார்.
இதனிடையே, இருநாள் அதிகாரபூர்வ பயணமாக இலங்கை சென்றிருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் காதுகளுக்கு இத்தகவல் எட்டியது.
அதன்பின், "மருந்து மற்றும் மருத்துவச் சாதனங்கள் பற்றாக்குறை காரணமாக அறுவை சிகிச்சைகள் நிறுத்தி வைக்கப்பட்ட செய்தியறிந்து வேதனையடைந்தேன். இவ்விவகாரத்தில் இலங்கைக்கு எந்த வழியில் இந்தியா உதவ முடியும் என்பதை ஆராயும்படி இந்தியத் தூதர் கோபால் பாக்லேயைக் கேட்டுக்கொண்டுள்ளேன்," என்று திரு ஜெய்சங்கர் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
இந்நிலையில், மருந்துப்பொருள்களும் மருத்துவச் சாதனங்களும் போதிய அளவில் இருப்பதை உறுதிப்படுத்த சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவு தேவையான ஏற்பாடுகளைச் செய்துவிட்டதால் அறுவை சிகிச்சைகளை நிறுத்திவைக்கும் அறிவிப்பை உடனடியாக மீட்டுக்கொள்வதாக டாக்டர் திலகரத்ன நேற்று தெரிவித்தார்.
இதனையடுத்து, நேற்று முதல் பேராதனை மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகள் வழக்கம்போல் மீண்டும் மேற்கொள்ளப்படுகின்றன.
சீனாவிடமிருந்து பறிக்கப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைப்பு
இதற்கிடையே, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே உள்ள சிறுதீவுகளில் காற்றாலைகளை அமைக்கும் ஒப்பந்தத்தை சீன நிறுவனத்திடம் இருந்து திரும்பப் பெற்ற இலங்கை அரசு, அதனை இந்தியாவிடம் ஒப்படைத்தது.
இலங்கையில் சீனா வலுவாகக் காலூன்ற முயன்று வருவதற்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
முன்னதாக, இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலுள்ள பாக் நீரிணைப் பகுதியில் இருக்கும் சிறிய தீவுகளில் காற்றாலைகளை அமைக்க 2019ஆம் ஆண்டு ஒரு சீன நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.
ஆனால், இந்தியக் கடலோரத்தை ஒட்டி அதற்கான பணிகளைச் சீன நிறுவனம் மேற்கொண்டதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. அதனால், காற்றாலைகளை அமைக்கும் பணி தொடங்கப்படவே இல்லை. பின்னர் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில், அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை சென்ற நிலையில், இரு நாடுகளுக்கு இடையே ஆறு புரிந்துணர்வுக் குறிப்புகள் கையெழுத்தாகின. அவற்றில், நயினாதீவு, அனலைதீவு, நெடுந்தீவு ஆகிய தீவுகளில் மூன்று காற்றாலைகளை அமைக்கும் ஒப்பந்தமும் அடங்கும்.
இத்திட்டத்திற்கு இந்தியா நிதி ஆதரவு வழங்கும். சீனாவுடன் முன்னர் செய்துகொள்ளப்பட்ட உடன்பாட்டின்படி, காற்றாலைகளை அமைக்க ஆசிய வளர்ச்சி வங்கி நிதியாதரவு வழங்கவிருந்தது.
கடந்த வாரம், காற்றாலைகளை அமைக்கும் ஒப்பந்தம் தொடர்பில் இலங்கையின் நிலைப்பாடு குறித்து அதிருப்தி தெரிவித்த இலங்கைக்கான சீனத் தூதர், அது வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்திவிடும் என்றும் எச்சரித்திருந்தார்.

