சிங்கப்பூரில் மின்சாரக் கட்டணம் ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை பத்து விழுக்காடு உயரவிருக்கிறது.
உக்ரேன்-ரஷ்யா பூசல் தொடர்ந்து நீடிப்பதால், கட்டணம் அதிகரிக்கிறது என்று எஸ்பி குழுமம் தெரிவித்தள்ளது.
ஒரு கிலோவாட் மணி நேரத்திற்கு மின்சாரக் கட்டணம் 27.94 காசாக உயரும் (பொருள், சேவை வரிக்கு முன்பாக). தற்போது கட்டணம் 25.44 காசு.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக நாலறை வீடுகளில் வசிப்போருக்கான சராசரி மின்சாரக் கட்டணம் மாதத்திற்கு $8.73 அதிகரிக்கும் என்று குழுமம் கூறியது.
உக்ரேனில் நிகழும் பூசல் காரணமாக எண்ணெய், எரிசக்தி விலைகள் உயர்ந்துள்ளன. உலகின் ஒட்டுமொத்த எண்ணெய் விநியோகத்தில் 12 விழுக்காடும், இயற்கை எரிபொருளில் 17 விழுக்காடும் ரஷ்யாவிலிருந்து தருவிக்கப்படுகிறது.
எரிசக்தி சந்தை ஆணையம் நிர்ணயித்துள்ள வழிகாட்டுதல்களின் அடிப்படையில், காலாண்டுக்கு ஒருமுறை மின்சாரக் கட்டணங்களை எஸ்பி குழுமம் மறுஆய்வு செய்து வருகிறது.


