ரஷ்யா-உக்ரேன் போரின் எதிரொலியாக சிங்கப்பூரில் மின்சாரக் கட்டணம் பத்து விழுக்காடு வரை அதிகரிக்கிறது.
அடுத்த மூன்று மாதங்களுக்கு இந்தக் கட்டண உயர்வு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் சிங்கப்பூரில் உள்ள குடும்பங்கள் மின்சாரத்திற்கு அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கும்.
இந்த விவரத்தை வெளியிட்ட எஸ்பி குழுமம், இன்று தொடங்கி ஜூன் 30ஆம் தேதி வரையில் மணிக்கு ஒரு கிலோவாட் மின்சாரக் கட்டணம் 27.94 காசாக இருக்கும் என்று தெரிவித்தது.
இதில் பொருள் சேவை வரி சேர்க்கப்படவில்லை. தற்போது மணிக்கு ஒரு கிலோவாட் மின்சாரக் கட்டணம் 25.44 காசாக உள்ளது.
அடுத்த மூன்று மாதங்களுக்கு பொருள் சேவை வரி நீங்கலாக மணிக்கு ஒரு கிலோவாட் மின்சாரத்திற்கு 2.5 காசு கூடுதலாக செலுத்த வேண்டும்.
உதாரணமாக, நான்கறை வீவக வீட்டில் வசிக்கும் ஒரு குடும்பம், மாதந்தோறும் சராசரி யாக 349 கிலோவாட் மின்சாரத்தைப் பயன்படுத்தினால் ஜிஎஸ்டி நீங்கலாக மாதந்தோறும் 8.73 வெள்ளி வரை கட்டணம் கூடுத லாக இருக்கும்.
முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் தற்போதைய மின் கட்டணம் ஏறக்குறைய இரண்டு மடங்கு உயர்வாகும்.
அடுத்த காலாண்டில் மின் கட்டண உயர்வு, இதற்கு முந்தைய காலாண்டைவிட சரசரியாக 9.9 விழுக்காடு அல்லது மணிக்கு ஒரு கிலோவாட் மின்சாரம் 2.49 காசு அதிகமாக இருக்கும்.
"உக்ரேனிய போரால் உலக அளவில் எரிவாயு, எண்ெணய் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் ஏற்பட்ட செலவுகளே மின் கட்டண அதிகரிப்புக்கு காரணம்," என்று எஸ்பி குழுமம் தெரிவித்தது.
இது தவிர சமையல் எரிவாயு கட்டணமும் கூடுகிறது.
அடுத்த மூன்று மாதங்களுக்கு வீடுகளுக்கான சமையல் எரிவாயு, ஜிஎஸ்டி நீங்கலாக 21.66 காசுக்கு உயர்த்தப்படும் என்று 'சிட்டி எனர்ஜி' தனது தனி அறிக்கையில் தெரிவித்துள்ளது. தற்போது மணிக்கு ஒரு கிலோவாட் எரிவாயுக் கட்டணம் 20.21 காசாக உள்ளது. எரிபொருள் மற்றும் எரிபொருள் அல்லாத பொருட்களின் செலவுகளே எரிவாயு கட்டணம் கூடிய தற்கு காரணம் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் சிட்டி எனர்ஜி சுட்டிக்காட்டியது.
சிட்டி எனர்ஜி நிறுவனம், சிங்கப்பூரில் சுமார் 870,000 பயனீட்டாளர்களுக்கு குழாய் வழியாக எரிவாயுவை விநியோகித்து வருகிறது.
உலகம் முழுவதும் எரிவாயுக் கட்டணம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்ததால் அண்மைய மாதங்களாக மின்சாரக் கட்டணம் கூடி வருகிறது.
தொற்றுநோயிலிருந்து மீண்டு வரும் சூழல், மோசமான வானிலை, குறைவான எரிவாயு விநியோகம் போன்ற காரணங்களால் தேவை அதிகரித்துள்ளது இதற்கு காரணமாகும்.
குளிர்காலம் மாறும்போது உலகளாவிய எரிசக்தி நெருக்கடி குறையும் என் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஐந்து வாரங்களுக்கு முன்பு தொடங்கிய உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி குறைந்து பற்றாக்குறை ஏற் படலாம் என்ற அச்சம் அதிகரித்துள்ளது.
உலகின் மொத்த எண்ணெய் விநியோகிப்பில் ரஷ்யாவின் பங்கு மட்டும் 12 விழுக்காடு.
இயற்கை எரிவாயு விநி யோகிப்பில் ரஷ்யாவின் பங்கு 17 விழுக்காடாகும்.

