புத்தாக்கத்தைக் கருப்பொருளாகக் கொண்ட இவ்வாண்டின் தமிழ் மொழி விழா, புதிய சிந்தனை, தொழில்நுட்பம் வாயிலாக அன்றாட வாழ்வில் தமிழ் மொழிப் புழக்கத்தை ஊக்குவிக்கிறது.
மாதங்கி இளங்கோவன்
இன்று தொடங்கும் தமிழ் மொழி விழா, மே 1 வரை நடைபெறும். 44 அமைப்புகள் 44 நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளன.
மொழி, இலக்கியம், கலை, கலாசாரம் தொடர்பான இந் நிகழ்ச்சிகள் பெரும்பாலும் ஸூம், இன்ஸ்டகிராம், யூடியூப் போன்ற சமூக வலைத் தளங்கள் வழியாக நடைபெற உள்ளன. அதிகாரபூர்வ திறப்பு விழா நாளை இரவு 9 மணி அளவில் வசந்தம் ஒளிவழியில் நடக்க விருக்கிறது. மக்குலம் கலைக்கூடம், பெயர் பெற்ற கவிஞர் களான பாரதியார், பாரதிதாசன், முத்துசுவாமி தீட்சித்தர், ஊத்துக்காடு வெங்கட சுப்பையர், அருணாசலக் கவிராயர் ஆகியவர்களின் கவிதைகளையும் குத்தாட்டத்தையும் இணைத்து கலை நிகழ்ச்சி படைக்கிறது.
சிங்கைத் தமிழ்ச் சங்கம், ஃபேஸ்புக் தளத்தில் 'ஒரு காமிக் கதை சொல்லட்டா' என்னும் கேலிச்சித்திரம் தயாரிக்கும் போட்டி ஒன்றை 12 முதல் 21 வயது வரையிலானவர்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இறுதிச்சுற்றுக்குத் தேர்வு பெறும் மூன்று போட்டியாளர்கள் கேலிச்சித்திரக் காணொளி தயாரிப்பர். இவ்வாண்டு மாறுபட்ட சிந்தனையைத் தூண்டும் பல நிகழ்ச்சிகள் மாதம் முழுவதும் இடம்பெறுகின்றன.
இளையர்களின் தமிழ் மொழித் திறனை மெருகூட்டும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளும் போட்டிகளும் அமைந்திருப்பதோடு அவை இளையர் களாலே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சிகள் குறித்த மேல்விவரங்களுக்கு காண்க: இன்ஸ்டகிராம்- @TamilLang Festival, facebook.com/Tamil LanguageCouncilSingapore, வளர்தமிழ் இயக்கத்தின் இணையப் பக்கம் www.tamil.org.sg ஆகியவற்றை நாடலாம்.

