கொவிட்-19 தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த சிங்கப்பூர் எல்லைகள் இன்று முதல் அனைத்து லகப் பயணிகளுக்குத் திறக்கப்படுகின்றன. ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு எல்லைகள் திறக்கப்படுவதால் சிங்கப்பூரிலிருந்து வெளிநாடு செல்வோரும் சிங்கப்பூருக்கு வருவதற்காகக் காத்திருப்போரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இம்மாதம் 24ஆம் தேதி மக் களிடம் நேரடியாக உரையாற்றிய பிரதமர் லீ சின் லூங், கொவிட்-19 சூழ்நிலை கட்டுக்குள் இருப்பதால் எல்லை தாண்டிய பயணக் கட்டுப் பாடுகள் தளர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார்.
இதையடுத்து தளர்வுகளுடன் எல்லைகள் திறக்கப்படும் அறிவிப்பு வெளியானது.
இதன் தொடர்பில் பேசிய போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன், பயணங்கள் மிகவும் வசதியாக இருக்க நடைமுறைகள் மாற்றியமைக்கப்படுகின்றன என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்று முதல் எந்த நாட்டவரும் எந்த வட்டாரத்தைச் சேர்ந்தவரும் முழுமையாகத் தடுப்பூசி போட்டிருந்தால் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர்கள். இவர்கள் தனிமைப் படுத்திக் கொள்ளவோ சிங்கப்பூருக்கு வந்த பிறகு கொவிட்-19 சோதனை செய்ய வேண்டிய தேவையோ இருக்காது.
சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு முன் அனுமதியும் ரத்து செய்யப்படுகிறது. தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்கான சிறப்பு விடிஎல் பாதைகளும் அகற்றப்படுகின்றன. ஆனால் விமானம் அல்லது கடல் வழியாக வரும் பயணிகள் சிங்கப்பூர் வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தும் கொவிட்-19 சோதனையை செய்திருக்க வேண்டும்.
உலகின் சில பகுதிகளில் கிருமித்தொற்று அதிகமாக இருப்பதே இதற்கு காரணம் என்று சுகாதார அமைச்சரை சுட்டிக்காட்டி திரு ஈஸ்வரன் கூறியிருந்தார்.
புதிய விதிமுறைகள் இந்தியாவுக்குப் பொருந்தும்.
மலேசியாவும் இன்று முதல் தனது எல்லைகளை முழுமையாக திறக்கிறது. மலேசிய சுகாதார அமைச்சரான கைரி ஜமாலுதீன், சிங்கப்பூர் பயணிகளை ஆவலுடன் வரவேற்பதாக கூறியுள்ளார்.
சிங்கப்பூரிலிருந்து விமானம், தரை வழியாக ஜோகூர் கடற்பாலம் அல்லது 2வது பாலம் வழியாக வரும் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கு வருகையின்போது கொவிட்-19 சோதனை, தனிமை உத்தரவு இருக்காது என்று அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூர், மலேசிய குடிமக்களுக்கு பயணக் காப்புறுதி தேவையில்லை. இரு நாடுகளுக்கு இடையிலான ஏற்பாடுகளின்கீழ் இது இடம்பெறுகிறது.
சிங்கப்பூருக்கான சில விதி முறைகள் மற்ற நாடுகளைவிட வேறுபடுவதால் கவனித்து பாதுகாப்பாக, முகக்கவசம் அணிந்து பயணம் செய்யுங்கள் என்று கூறிய திரு கைரி ஜமாலுதீன், வாங்க, ஒன்றாகச் சாப்பிடுவோம் என்று அழைப்பு விடுத்தார்.
இதற்கிடையே ஜோகூர் முதல்வர் ஒன் ஹஃபிஸ் காஸி, சிங்கப்பூரு டனான இரண்டு தரைவழி எல்லைகள் வழியாக முதல் வாரத்தில் 400,000 பேர் பயணம் செய்வார்கள் என்று தெரிவித்து உள்ளார்.
ஜோகூர் பாருவைச் சேர்ந்த உற்பத்தி துறை ஊழியரான ஆர் புஷ்பா தேவி, 57, புதிய மாற்றம் குறித்து பெருமகிழ்ச்சி அடைவதாகத் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
இதுவரை விடிஎல்லில் ஒருமுறை மட்டும் சொந்த வீட்டுக்குத் திரும்பியிருப்பதாகக் கூறிய அவர், விரைவில் மலேசியாவுக்குச் செல்லத் திட்டமிடுதாகக் கூறினார். அதே போல குளுவாங்கைச் சேர்ந்த சிஸ் கோ அதிகாரி கார்த்திக் மனோகரன், 32, இந்த மாற்றத்திற்காக தாம் நீண்ட நாள் காத்திருந்ததாகக் கூறினார்.
சுற்றுலா செல்வதைப் பொழுதுபோக்காகக் கொண்டுள்ள ரேணுகா நடராசன், 33, "மலேசிய உணவு ருசித்து வெகுநாட்கள் ஆகிவிட்டதால் விரைவில் அங்கு செல்ல திட்டமிடுகிறேன்," என்றார்.
இதற்கு முன்பு சிங்கப்பூரின் எல்லைகள் குறிப்பிட்ட நாடுகளுக்குகடுமையான கட்டுப்பாடுகளின் கீழ் திறக்கப்பட்டிருந்தன.
கூடுதல் செய்தி:
கி.ஜனார்த்தனன்.

