சிங்கப்பூர்-மலேசியா எல்லைகள் மீண்டும் திறப்பு; 7 மணி நேரத்தில் 11,000க்கும் மேற்பட்டோர் பயணம்

2 mins read
1e49c8bf-0932-4e03-83d1-0b8e30db6486
உட்லண்ட்ஸ் ரயில் சோதனைச்சாவடியில் நேற்று இரவு 10.20 மணியளவில் காணப்பட்ட கூட்டம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 3

சிங்கப்பூர்-மலேசியா நில எல்லைகள் நேற்று நள்ளிரவு திறக்கப்பட்டதில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 1) காலை 7 மணி வரை 11,000க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை இரவு 11 மணிக்கெல்லாம் உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகளில் பயணிகள் வரிசைகளில் நிற்கத் தொடங்கிவிட்டதாக குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் தெரிவித்தது.

உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் பயணிகளின் வரிசைகளும் துவாஸ் சோதனைச்சாவடியில் கார்கள், மோட்டார்சைக்கிள்களின் வரிசைகளும் காணப்பட்டன.

எல்லைகள் திறக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் கார்கள், மோட்டார்சைக்கிள்கள் வரிசைகளில் காணப்பட்டன. மாறாக, பேருந்துக் கூடம் சற்று நேரத்தில் வெறிச்சோடியது.

உறவுகளைப் பிரிந்து வாடிய முகங்கள் இப்போது மலர்கின்றன

கொவிட்-19 சூழலில் உறவுகளைப் பிரிந்து வாடிய முகங்கள், இப்போது மீண்டும் பயணம் செய்ய முடிவதால் மலர்ந்தன.

இது, மலேசியர்களுக்கு மீண்டும் சுதந்திரம் பெற்ற உணர்வைத் தந்திருப்பதாக ஜோகூரைச் சேர்ந்த சுப்பையம்மா, 40, தமிழ் முரசிடம் கூறினார்.

இதற்கு முன்னதாக தமது பிள்ளைகளைக் காண ஒருமுறை மலேசியாவுக்குத் திரும்பியபோது பல்வேறு சோதனைகளையும் கடக்க வேண்டி இருந்ததாகக் கூறிய அவர், இப்போது சுமுகமாக எல்லையைக் கடந்துச் செல்ல வழிசெய்த சிங்கப்பூர், மலேசிய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.

எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் ஜோகூருக்குத் திரும்ப முடிவது விக்னேஷ்வரன் முத்தையாவுக்கு சொல்ல முடியாத அளவிற்கு மகிழ்ச்சி.

பயணிகளில் பலரும் நீண்டநாளுக்குப் பிறகு மலேசியா திரும்பியுள்ளனர். எதிர்பார்த்ததைவிட பயணக் கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார் ஜோகூரைச் சேர்ந்த ரேகவன் அருணாசலம், 32.

"சிங்கப்பூரில் வேலை செய்யும் மலேசியர்கள், கொவிட்-19 சூழலில் மலேசியா திரும்ப இயலாததால் அவர்கள் பட்ட வலி கொஞ்சம் நஞ்சமல்ல," என்றார் அவர்.

ஈராண்டுகளுக்கு முன்னர் எல்லைக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டபோது தமக்கு ஏற்பட்ட குழப்பத்தை நினைவுகூர்ந்த அவர், இப்போது இதத்துடன் தாம் மலேசியா திரும்புவதாகக் கூறினார்.

உற்பத்தித் துறையில் ஆய்வுக்கூடத்தில் வேலை செய்யும் விஜயா ஆறுமுகம், 27, ஈராண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் மலேசியாவில் உள்ள தமது குடும்பத்தைக் காணப்போவதாகத் தெரிவித்தார். சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே எப்போதும்போல போக்குவரத்து தொடரவேண்டும் என்றார் அவர்.

இன்று காலை ஜோகூருக்குத் திரும்ப முடிவு செய்த விஜயலட்சுமி, 28, தமது குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சியைத் தரப்போவதாகச் சொன்னார்.

அவரைப்போலவே ஈராண்டுகளுக்குப் பிறகு குடும்பத்தினரைக் காணப்போவதாக பணிமனை ஊழியர் மோகன் மணி, 25, சொன்னார்.

கூடுதல் செய்தி: கி.ஜனார்த்தனன்