இலங்கை அரசாங்கம், சனிக்கிழமை (ஏப்ரல் 2) மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை (ஏப்ரல் 4) காலை 6 மணி வரை நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
இலங்கையில் பொருளியல் நெருக்கடி மோசமடைந்துள்ளதால் அத்தியாவசியப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அரசாங்கத்திற்கு எதிராகக் கொந்தளிக்கும் மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக மாறின.
இதைத் தொடர்ந்து அதிபர் கோத்தபாய ராஜபக்சே நேற்று வெள்ளிக்கிழமை இரவு நாடு தழுவிய அவசரநிலையை அறிவித்தார். அத்தியாவசிய பொருள், சேவை விநியோகம் தொடர அவசரநிலை அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.
இலங்கைக்கு இந்தியா 40,000 டன் அரிசி, டீசல் உதவி
இத்தகைய சூழலில், இலங்கைக்கு 40,000 டன் அரிசி ஏற்றுமதி செய்ய இந்திய வணிகர்கள் தயாராகி வருகின்றனர். இதனால் இலங்கையில் அரிசி விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஓராண்டில் அரிசி விலை இரட்டிப்பாகிவிட்டதால் இலங்கை மக்கள் அரசாங்கத்தின்மீது கடும் கோபத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும், 40,000 டன் டீசலையும் இந்தியா அனுப்பி இருக்கிறது. டீசலுடன் இந்தியக் கப்பல் சனிக்கிழமை (ஏப்ரல் 2) இலங்கையைச் சென்றடைந்தது.
உலகின் ஆகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளரான இந்தியா, இலங்கைக்கு 1 பில்லியன் டாலர் (S$1.36 பி.) கடன் உதவி வழங்க கடந்த மாதம் இணக்கம் தெரிவித்திருந்தது.
எரிபொருள், உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் தட்டுப்பாட்டைக் குறைக்க இது உதவும் என நம்பப்படுகிறது.

