இலங்கையில் அவசரநிலை, ஊரடங்கு; இந்தியா அரிசி, டீசல் உதவி

இலங்கையில் அவசரநிலை, ஊரடங்கு; இந்தியா அரிசி, டீசல் உதவி

2 mins read
0bd57cb4-fc4b-4533-a3b9-f5958dfa9a93
கொழும்பில் கடும் ராணுவ, காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் நேற்று அங்கு கடைகள் திறக்கப்பட்டன. படம்: ஏஎஃப்பி -

இலங்­கை­யில் நில­வும் மோச­மான பொரு­ளி­யல் நெருக்­கடி கார­ண­மாக அரங்கேறிய வன்­முறையைத் தொடர்ந்து, அந்­நாட்­டில் அவ­ச­ர­நிலை பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

அத்துடன், நேற்று மாலை 6 மணி­யி­லி­ருந்து நாளைக் காலை 6 மணி­வரை 36 மணி நேரத்­திற்கு நாடு முழு­வ­தும் ஊர­டங்கு உத்­த­ரவு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சட்ட ஒழுங்கைக் கட்டிக்காக்கவும் அத்தியாவசிய பொருள், சேவை விநியோகம் தொடரவும் அவசரநிலை அவசியம் என்று அதிபர் கோத்தபாய ராஜபக்சே குறிப்பிட்டார்.

இலங்கையில் எரி­பொ­ருள் உள்­ளிட்ட அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­களுக்­குத் தட்டுப்பாடு நில­வு­வதை அடுத்து, நூற்­றுக்­க­ணக்­கா­னோர் நேற்று முன்தினம் அதி­பர் வீட்­டிற்கு முன்­பா­கத் திரண்டு போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். அப்­போது, காவல்­துறை, ராணு­வத்­திற்­குச் சொந்­த­மான வாக­னங்­களை அவர்­கள் தீயிட்­டுக் கொளுத்­தி­னர்.

இதன் தொடர்­பில் 53 பேர் கைது செய்­யப்­பட்­ட­னர். தலை­ந­கர் கொழும்­பி­லும் அதன் புற­ந­கர்ப் பகுதி­க­ளி­லும் நேற்று முன்­தி­னம் ஊர­டங்கு பிறப்­பிக்­கப்­பட்டு, பின்­னர் விலக்­கிக்கொள்­ளப்­பட்­டது.

இதனிடையே, "அமைதிக்காகப் போராட இலங்கை மக்களுக்கு உரிமை உள்ளது. ஜனநாயகத்தில் கருத்துச் சுதந்திரத்திற்கு அது அவசியம்," என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகவும் டுவிட்டர் வழியாக அவர் கூறியிருக்கிறார்.

மொத்­தம் 22 மில்­லி­யன் மக்கள்­தொ­கை­யைக் கொண்ட இலங்­கை­யில் நாள்­தோ­றும் 13 மணி நேரம்­வரை மின்­வெட்டு நில­வு­கிறது. கடந்த ஈராண்­டு­களில் அந்­நி­யச் செலா­வணி கையி­ருப்பு 70% குறைந்­து­விட்­ட­தால் எரி­பொ­ருளை இறக்­கு­மதி செய்ய முடி­யா­மல் அந்­நாடு திண்­டாடி வரு­கிறது.

நீண்­ட­நேர மின்­வெட்­டால் மாண­வர்­கள் பெரும் அவ­திப்­ப­டு­வ­தால் முன்­கூட்­டியே, அதா­வது நாளை முதலே பள்ளி விடு­மு­றையை அறி­விக்­கும்­படி கல்வி அமைச்­சுக்­குப் பொதுப் பய­னீட்டு ஆணை­யம் பரிந்­து­ரைத்து இருக்­கிறது.

40,000 டன் அரிசி, டீசல் உதவி

இத்­த­கைய சூழ­லில், இலங்­கைக்கு 40,000 டன் அரிசி ஏற்­று­மதி செய்ய இந்­திய வணி­கர்­கள் தயா­ராகி வரு­கின்­ற­னர். இத­னால் இலங்­கை­யில் அரிசி விலை குறை­யும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. கடந்த ஓராண்­டில் அரிசி விலை இரட்­டிப்­பா­கி­விட்­ட­தால் இலங்கை மக்­கள் அர­சாங்­கத்­தின்­மீது கடும் கோபத்­தில் இருப்­ப­தா­கக் கூறப்­படு­கிறது.

மேலும், 40,000 டன் டீசலையும் இந்தியா அனுப்பி இருக்கிறது. டீசலுடன் இந்தியக் கப்பல் நேற்று இலங்கையைச் சென்றடைந்தது.

உல­கின் ஆகப்­பெ­ரிய அரிசி ஏற்­று­ம­தி­யா­ள­ரான இந்­தியா, இலங்­கைக்கு 1 பில்­லி­யன் டாலர் (S$1.36 பி.) கடன் உதவி வழங்க கடந்த மாதம் இணக்­கம் தெரி­வித்­து இருந்தது.

எரி­பொ­ருள், உணவு, மருந்து உள்­ளிட்ட அத்­தி­யா­வ­சிய பொருள்­களின் தட்­டுப்­பாட்­டைக் குறைக்க இது உத­வும் என நம்பப்படுகிறது.