இலங்கையில் நிலவும் மோசமான பொருளியல் நெருக்கடி காரணமாக அரங்கேறிய வன்முறையைத் தொடர்ந்து, அந்நாட்டில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நேற்று மாலை 6 மணியிலிருந்து நாளைக் காலை 6 மணிவரை 36 மணி நேரத்திற்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட ஒழுங்கைக் கட்டிக்காக்கவும் அத்தியாவசிய பொருள், சேவை விநியோகம் தொடரவும் அவசரநிலை அவசியம் என்று அதிபர் கோத்தபாய ராஜபக்சே குறிப்பிட்டார்.
இலங்கையில் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதை அடுத்து, நூற்றுக்கணக்கானோர் நேற்று முன்தினம் அதிபர் வீட்டிற்கு முன்பாகத் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, காவல்துறை, ராணுவத்திற்குச் சொந்தமான வாகனங்களை அவர்கள் தீயிட்டுக் கொளுத்தினர்.
இதன் தொடர்பில் 53 பேர் கைது செய்யப்பட்டனர். தலைநகர் கொழும்பிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் நேற்று முன்தினம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, பின்னர் விலக்கிக்கொள்ளப்பட்டது.
இதனிடையே, "அமைதிக்காகப் போராட இலங்கை மக்களுக்கு உரிமை உள்ளது. ஜனநாயகத்தில் கருத்துச் சுதந்திரத்திற்கு அது அவசியம்," என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகவும் டுவிட்டர் வழியாக அவர் கூறியிருக்கிறார்.
மொத்தம் 22 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட இலங்கையில் நாள்தோறும் 13 மணி நேரம்வரை மின்வெட்டு நிலவுகிறது. கடந்த ஈராண்டுகளில் அந்நியச் செலாவணி கையிருப்பு 70% குறைந்துவிட்டதால் எரிபொருளை இறக்குமதி செய்ய முடியாமல் அந்நாடு திண்டாடி வருகிறது.
நீண்டநேர மின்வெட்டால் மாணவர்கள் பெரும் அவதிப்படுவதால் முன்கூட்டியே, அதாவது நாளை முதலே பள்ளி விடுமுறையை அறிவிக்கும்படி கல்வி அமைச்சுக்குப் பொதுப் பயனீட்டு ஆணையம் பரிந்துரைத்து இருக்கிறது.
40,000 டன் அரிசி, டீசல் உதவி
இத்தகைய சூழலில், இலங்கைக்கு 40,000 டன் அரிசி ஏற்றுமதி செய்ய இந்திய வணிகர்கள் தயாராகி வருகின்றனர். இதனால் இலங்கையில் அரிசி விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஓராண்டில் அரிசி விலை இரட்டிப்பாகிவிட்டதால் இலங்கை மக்கள் அரசாங்கத்தின்மீது கடும் கோபத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும், 40,000 டன் டீசலையும் இந்தியா அனுப்பி இருக்கிறது. டீசலுடன் இந்தியக் கப்பல் நேற்று இலங்கையைச் சென்றடைந்தது.
உலகின் ஆகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளரான இந்தியா, இலங்கைக்கு 1 பில்லியன் டாலர் (S$1.36 பி.) கடன் உதவி வழங்க கடந்த மாதம் இணக்கம் தெரிவித்து இருந்தது.
எரிபொருள், உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் தட்டுப்பாட்டைக் குறைக்க இது உதவும் என நம்பப்படுகிறது.

