இலங்கையில் விலைவாசி கட்டுக்கடங்காமல் போய்விட்டது. அந்நிய செலாவணி நெருக்கடி ஏற்பட்டுவிட்டது. இதற்கு அந்த நாட்டின் அதிபர்தான் காரணம். ஆகையால் அவர் பதவி விலக வேண்டும் என்று மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில், இலங்கை அரசு சமூக ஊடகங்களுக்குத் தடை விதித்துவிட்டது.
கடந்த சனிக்கிழமை மாலை முதல் இன்று திங்கட்கிழமை காலை வரை ஊரடங்கும் போடப்பட்டு இருக்கிறது. ஆனால் தடையையும் மீறி நேற்று எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் தலைநகர் கொழும்பில் இருக்கும் சுதந்திரச் சதுக்கத்தை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர்.
அவர்களை ஆயுதப்படையினர் தடுத்து நிறுத்தினர். கண்டி நகரில் மாணவர்கள் ஊரடங்கை மீறி நடத்திய ஆர்ப்பாட்டத்தைக் காவல் துறை கண்ணீர்ப்புகையை அடித்து கலைத்ததாக தகவல்கள் கூறின.
தற்காப்பு அமைச்சின் கோரிக் கையின் பேரில் சமூக ஊடகத் தளங்களுக்குத் தற்காலிகமாக தடைவிதிக்கும்படி அத்தகைய சேவைகளை வழங்குவோர் கேட்டுக்கொள்ளப்பட்டதாக 'அடர்டெரானா' என்ற தனியார் இணையத்தளம் தெரிவித்தது.
பொருளியல் நெருக்கடிக்கு எதிராக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த கொழும்பில் கூடும்படி சமூக ஊடகத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு இளைஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டன. பிற்பகலில் அவை பயன்பாட்டுக்கு வந்ததாக அரசு அறிவித்தது.
குடிமக்கள் ஆர்ப்பாட்டத்தை அடுத்து வெள்ளிக்கிழமை பின்னேரத்தில் அரசாங்கம் அவசரநிலையை அறிவித்தது.
அந்த அவசரநிலைப் பிரகடனம் அதிபர் ராஜபக்சேவுக்கு அதிக அதிகாரங்களை வழங்கும்.
சட்டங்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும், மக்களைத் தடுத்து வைக்கவும், சொத்துகளை முடக்கவும் அப்பிரகடனம் அதிபருக்கு அதிகாரம் வழங்குகிறது.
இலங்கையில் கடுமையான பொருளியல் நெருக்கடி நிலவுகிறது. உணவு, எரிபொருளுக்குப் பெரும் பஞ்சம் நிலவுகிறது. விலைவாசி 19 விழுக்காடு அதிகரித்துவிட்டது.
அதிபர் ராஜபக்சேவும் அர சாங்கத்தில் பதவி வகிக்கும் அவருடைய குடும்பத்தாரும் விலக வேண்டும் என்று வீதிகளில் இறங்கி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தத் தொடங்கிவிட்டனர்.
இவ்வேளையில், நாட்டின் தலைநகர் பகுதியில் ஊரடங்கை மீறியதற்காக சனிக்கிழமை இரவு 10 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 6 மணி வரை 664 பேரைக் கைதுசெய்து உள்ளதாக காவல்துறை தெரிவித்தது.
பொருளியல் நெருக்கடியைச் சமாளிக்க அண்மைய வாரங்களில் அந்த நாட்டின் நாணய மதிப்பு குறைக்கப்பட்டது. வட்டி விகிதம் ஏறியது. அவசியமற்ற இறக்குமதி களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பங்குச் சந்தை வியாபாரம் ஏறக்குறைய நின்றுபோய் இருக்கிறது.

