கடும் பொருளியல் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் பிரதமர் மகிந்த ராஜபக்சே தவிர்த்து மற்ற 26 அமைச்சர்களும் பதவி விலகினர்.
எரிபொருள், உணவுப்பொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கடும் விலையேற்றத்தைச் சந்தித்தன. இதனால், பெரும் துன்பத்திற்குள்ளான மக்கள் அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து, இலங்கையில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது. அத்துடன், நேற்றுக் காலை 6 மணிவரை 36 மணி நேரத்திற்கு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, நாட்டின் நெருக்கடி நிலையைக் கருத்தில் கொண்டு அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகுவதாக அறிவித்தனர்.
அதனை ஏற்றுக்கொண்ட அதிபர் கோத்தபாய ராஜபக்சே, அனைத்துக் கட்சி அமைச்சரவையை அமைக்க அழைப்பு விடுத்தார். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளியல் நெருக்கடியைத் தீர்க்க அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, புதிதாக நான்கு அமைச்சர்களை அவர் நியமித்தார்.
முன்பு தம் சகோதரர் பசில் ராஜபக்சே வசமிருந்த நிதியமைச்சர் பொறுப்பை அலி சப்ரியிடம் அதிபர் ஒப்படைத்தார். வெளியுறவு அமைச்சராக ஜி.எல்.பெய்ரிஸ், கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்தன, நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக ஜான்ஸ்டன் ஃபெர்னாண்டோ ஆகியோர் நேற்று பதவியேற்றுக்கொண்டனர்.
ஆனால், அதிபராக கோத்தபாய ராஜபக்சேயும் பிரதமராக மகிந்த ராஜபக்சேயும் நீடிக்கும் நிலையில், புதிய அமைச்சரவை நியமனம் அர்த்தமற்ற நடவடிக்கை என்றும் இதனால் மாற்றமேதும் விளையப்போவதில்லை என்றும் இலங்கை மக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.