வரலாறு காணாத பொருளியல் நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் அதிபர் கோத்தபாய ராஜபக்சே தலைமையிலான அரசாங்கம் கவிழும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
ஆளும் கூட்டணியிலிருந்து நாளுக்கு நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகி வருகின்றனர்.
புதிய நிதி அமைச்சராக பொறுப்பு ஏற்ற அலி சப்ரியும் 24 மணி நேரத்திற்குள் பதவி விலகிய தால் அரசாங்கத்துக்கு நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது.
"நான் என்னுடைய நிதி அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக விலகுகிறேன்," என்று அதிபருக்கு எழுதியுள்ள கடிதத்தில் சப்ரி தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.
கடந்த திங்கள்கிழமை தமது அமைச்சரவையை அதிரடியாக மாற்றியமைத்த அதிபர் கோத்தபாய ராஜபக்சே, நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்த சகோதரர் பசில் ராஜபக்சேயை நீக்கினார்.
அவருக்குப் பதிலாக அலி சப்ரி நியமிக்கப்பட்டார். ஆனால் அடுத்த நாளே சப்ரி பதவி விலகியுள்ளார்.
இந்தச் சூழ்நிலையில் நேற்று நாடாளுமன்றம் கூடியபோது பெரும்பாலான உறுப்பினர்கள் வரவில்லை. மொத்தம் 225 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில் கோத்தபாய ராஜபக்சே தலைமையிலான கூட்டணிக்கு 157 எம்பிக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.
ஆனால் கூட்டணிக் கட்சிகள் தங்களுடைய நிலைப்பாட்டில் இருந்து மாறியிருப்பதால் எந்த நேரத்திலும் இருபதுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடய ஆதரவை விலக்கிக் கொள்ளலாம் என எதிபார்க்கப் படுகிறது. இவர்கள் எதிர்க்கட்சி களுக்குத் தாவலாம் அல்லது தனித்துச் செயல்படலாம் எனத் தெரிகிறது. இதனால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை இழந்து கோத்தபாய ராஜபக்சேயின் ஆட்சி கவிழும் ஆபத்தில் உள்ளது.
இருந்தாலும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்கான அனைத்து முயற்சிகளையும் அதிபர் எடுத்து வருகிறார்.
அதிருப்தியாளர்களை தொடர்பு கொண்டு அவர் பேசி வருகிறார்.
அதிபர் பதவியிலிருந்து விலக மாட்டேன் என்று கூறியுள்ள அவர், 113 இடங்களில் பெரும்பான்மை பலத்தைக் காட்டும் கட்சியிடம் ஆட்சியை ஒப்படைக்கத் தயார் என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து விவாதிக்க இன்றும் நாளையும் நாடாளு மன்றத்தைக் கூட்ட கூட்டணி தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

