உக்ரேனின் நான்கு நகர்களில் செயல்பட்டு வந்த நான்கு எரிபொருள் கிடங்குகளை ஏவுகணை களைப் பாய்ச்சி அழித்துவிட்டதாக ரஷ்ய தற்காப்பு அமைச்சு நேற்று தெரிவித்தது.
அந்தக் கிடங்குகள் உக்ரேனிய படையினருக்குப் பொருள்களை வழங்குவதற்குப் பயன்படுத்தப்பட்டதாக அமைச்சு கூறியது.
அதேவேளையில், தங்களுக்கு ஆயுதங்கள்தான் தேவை என்று நேட்டோ நாடுகளுக்கு உக்ரேனிய வெளியுறவு அமைச்சர் டிமிட்ரி குலேபா திரும்பத் திரும்ப வேண்டுகோள் விடுத்தார்.
"நேட்டோ நாடுகளிடம் நாங்கள் மூன்றே மூன்றுதான் கேட்கிறோம். ஆயுதங்கள், ஆயுதங்கள், ஆயுதங்கள்தான் வேண்டும்," என்று பிரசல்ஸ் நகரில் நேட்டோ வெளியுறவு அமைச்சர்களுடன் கூடிய கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் திரு குலேபா கூறினார். தயக்கமின்றி உக்ரேனுக்கு ஆயுதங்களை நேட்டோ வழங்க வேண்டும் என்றாரவர்.
இந்நிலையில், உக்ரேனில் ரஷ்யா மேற்கொண்டு வரும் தாக்கு தலுக்கு 5,000க்கும் மேற்பட்ட குடிமக்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்றும் அவர்களில் 210 பேர் சிறார்கள் என்றும் ரஷ்ய முற்றுகைக்கு உட்பட்டு இருக்கும் உக்ரேனின் மரியபோல் நகரின் மேயர் தெரிவித்தார்.
இதனிடையே, ஐநா மனித உரிமை மன்றத்தில் இருந்து ரஷ்யாவை விலக்கிவைக்குமாறு கோரும் தீர்மானத்தின் மீது ஐநா பொதுப் பேரவை நேற்று வாக்களிக்க இருந்தது.
அந்த மன்றத்தில் இருந்து ரஷ்யாவை விலக்கிவைக்க வேண்டும் என்று அமெரிக்கா முழுமூச்சாக முயன்று வருகிறது.
அந்த மன்றத்தில் 47 நாடுகள் உள்ளன. மூன்றில் ஒரு பங்கு பெரும்பான்மை கிடைத்தால் ஒரு நாட்டை நீக்கிவிடலாம்.
உக்ரேனில் ரஷ்யா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாகக் கூறி அந்த நாட்டுக்கும் ரஷ்ய நிறுவனங்களுக்கும் தனிப்பட்டவர்களுக்கும் எதிரான தடைகளை அமெரிக்கா மேலும் தீவிரப்படுத்தி உள்ளது.
இவ்வேளையில், உக்ரேனில் தொடர்ந்து தாக்குதலை நடத்த சிரியா நாட்டினரையும் கூலிப்படையினரையும் ரஷ்யா உக்ரேனுக்குள் அனுப்புவதாக மேற்கத்திய அதிகாரிகள் கூறுகிறார்கள்.
உக்ரேன் போர் நீண்ட காலம் நீடிக்கும் வாய்ப்பு இருந்தாலும் கடைசியில் அதில் ரஷ்யா தோற்கும் என்றும் உக்ரேன் வெற்றி பெறும் என்றும் தான் கணிப்பதாக அமெரிக்க தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.