பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்த உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான இம்ரான் கானின் கடைசி அரசியல் பந்து வீச்சும் எடுபடவில்லை.
பிரதமர் இம்ரான் கான் மீது நம்பிக்கை இல்லை என்று சொல்லி எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த தீர்மானத்தின் மீது நேற்று அதி காலையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் அதிகமான உறுப்பினர்கள் அதாவது மொத்தம் 342 பேரைக் கொண்ட மன்றத்தில் 174 பேர் நம்பிக்கை இல்லை என்று வாக்கு அளித்தனர்.
அதை அடுத்து இம்ரான் கான் பதவி இழந்தார். உடனேயே அவர் தன் அதிகாரபூர்வ இருப்பிடத்தைக் காலி செய்துவிட்டு வெளியேறிவிட்டார். இருந்தாலும் அவருடைய ஆதரவாளர்கள் அமைதியான முறையில் ஆரப்பாட்டங்களில் ஈடுபட்டுவருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.
பாகிஸ்தானில் 2018ல் நடந்த பொதுத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இருந்தாலும் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெரீக்-இ-இன்சாப் கட்சி (பிடிஐ) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து பிற கட்சிகளின் ஆதரவுடன் இம்ரான் கான் பிரதமரானார்.
ஊழலை ஒழிப்பேன், பொருளியலை சரிசெய்வேன் என்று இம்ரான் கான் உறுதி கூறியபோதிலும் ஆட்சிக்கு வந்த சில ஆண்டுகளிலேயே பாகிஸ்தானில் பணவீக்கம் வெளிநாட்டுக் கடன் சுமை அதி கரிப்பு காரணமாக அவருக்கு ஆதரவு குறையத் தொடங்கியதாகத் தகவல்கள் வெளியாயின.
பாகிஸ்தானின் சக்திவாய்ந்த உளவு அமைப்பின் புதிய தலைவர் நியமனத்தில் கையெழுத்திட கடந்த ஆண்டு அக்டோபரில் இம்ரான் கான் மறுத்துவிட்டார். என்றாலும்கூட ராணுவ உயரதிகாரிகளுக்கும் இம்ரானுக்கும் இடையே எந்தவித முரண்பாடுகளும் இல்லை எனத் தகவல்கள் வெளிவந்தன.
இந்தச் சூழ்நிலையில் இம்ரான் அரசுக்கு ஆதரவளித்து வந்த முத்தாஹிதா குவாமி இயக்கம்-பாகிஸ்தான் (எம்க்யூஎம்-பி) கட்சியின் இரண்டு அமைச்சர்கள் அண்மையில் பதவி விலகினர். 342 இடங்களைக்கொண்ட மன்றத்தில் ஆளும் கூட்டணியின் பலம் 165 ஆகக் குறைந்தது. எதிர்த்தரப்பினர் நம்பிக்கை இல்லா தீர்மானத்தைத் தாக்கல் செய்தனர்.
இம்ரான் கானை எதிர்க்கும் கூட்டணியில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் பிஎம்எல்-என் கட்சி (84 உறுப்பினர்கள்), பிலாவால் புட்டோ- சர்தாரியின் பிபிபி கட்சி (56 இடங்கள்) ஆகியவை முக்கிய கட்சிகள். தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில் இம்ரான் கான் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றத்தை அதிபர் கலைத்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு 9ஆம் தேதி நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டது. இந்நிலையில் இம்ரான் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற நாயகர் ஆசாத் குவைசர், துணை நாயகர் காசிம் சூரி ஆகியோர் திடீரென்று பதவி விலகினர்.
என்றாலும் இடைக்கால மன்ற நாயகரை நியமித்து நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பை நடத்தி எதிர்க்கட்சிகள் இம்ரானை வீட்டுக்கு அனுப்பிவிட்டன.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் நாடாளுமன்றம் இன்று பிற்பகலில் கூடும் என்றும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் தலைவரான ஷெபாஸ் ஷெரிப் விரைவில் நாட்டின் புதிய பிரதமராக அறிவிக்கப்படலாம் என்றும் நேற்று தகவல்கள் தெரிவித்தன.

