இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடுவானில் கம்பிவட ஊர்திகள் (கேபிள் கார்) மோதிக்கொண்ட விபத்தில் குறைந்தது மூவர் உயிர் இழந்தனர்; பலர் காயமுற்றனர்.
தியோகர் மாவட்டம், திரிகூட மலைப்பகுதியில் பாபா வைத்தியநாத் கோவிலுக்கு அருகே நேற்று முன்தினம் இவ்விபத்து நிகழ்ந்தது.
விபத்தையடுத்து குறைந்தது 12 ஊர்திகளில் 48 பேர் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணியில் இந்திய விமானப் படையின் இரண்டு ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன. தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த ஒரு குழுவினரும் நிகழ்விடத்திற்கு அனுப்பப்பட்டனர். உள்ளூர்வாசிகளும் மீட்புப் பணிகளுக்கு உதவினர்.
நேற்று மாலை நிலவரப்படி, அவர்களில் 27 பேர் மீட்கப்பட்டுவிட்டனர். மீட்பு நடவடிக்கையின்போது ஒருவர் ஹெலிகாப்டரில் இருந்து விழுந்து மாண்டுபோனார்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாகக் கம்பிவட ஊர்திகள் மோதல் நிகழ்ந்திருக்கலாம் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
விபத்தைத் தொடர்ந்து, கம்பிவட ஊர்தி சேவையை வழங்கி வந்த நிறுவன மேலாளரும் அதன் ஊழியர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
கம்பிவட ஊர்தியில் 20 மணி நேரத்திற்கு மேலாக சிக்கிக்கொண்டபின் மீட்கப்பட்ட பீகாரைச் சேர்ந்த சைலேந்திர குமார் யாதவ் கூறுகையில், "உயிர் பிழைக்க மாட்டேன் என்று பலமுறை நினைத்தேன். இது மறுபிறப்புபோல் இருக்கிறது," என்றார்.
இரவு முழுவதும் விழித்திருந்ததாகக் கூறிய அவர், தண்ணீர்கூட கிடைக்கவில்லை என்றார்.