சுற்றுப்பயணத் துறையில் கொவிட்-19 ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் புதிய வாய்ப்புகள் குறித்தும் ஆராய்கிறது
சிங்கப்பூரில் பெரிதும் விரும்பப்படும் சுற்றுலாத்தலமான செந்தோசா இவ்வாண்டு தனது 50வது ஆண்டுநிறைவைக் கொண்டாடிவரும் நிலையில், கொவிட்-19 பரவல் காரணமாகத் தனது நீண்டகாலத் திட்டங்களை அது மறுஆய்வு செய்து வருகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டில் செந்தோசா-பிரானி பெருந்திட்டம் அறிவிக்கப்பட்டது. அடுத்த 20, 30 ஆண்டுகளில் அவ்விரு தீவுகளையும் மிகவும் விரும்பப்படும் சுற்றுலாத் தலங்களாக மேம்படுத்த அத்திட்டம் வழிகாட்டுகிறது.
புதிய நடைமுறைப் போக்குகளைப் புரிந்துகொள்ளவும் கொவிட்-19 தொற்றால் உருவாகி இருக்கவல்ல புதிய, நீடித்து நிலைக்கத்தக்க சுற்றுப்பயண வாய்ப்புகளை ஆய்வுசெய்யவும் சாத்தியக்கூறு ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக செந்தோசா மேம்பாட்டுக் கழகத்தின் பேச்சாளர் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி தெரிவித்தது.
சிங்கப்பூர் சுற்றுப்பயணத் துறையை விரைந்து மீட்டெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த மறுஆய்வு இடம்பெறுகிறது. சுற்றுப்பயணத் துறைக்கு ஆதரவளிக்க ஏறத்தாழ $500 மில்லியனை ஒதுக்கி இருப்பதாக அரசாங்கம் கடந்த வாரம் அறிவித்திருந்தது.
சுற்றுப்பயணத் துறையில் கொவிட்-19 பரவல் ஏற்படுத்திய தாக்கம் குறித்து ஆராய்வதற்குக் கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி செந்தோசா மேம்பாட்டுக் கழகம் ஒப்பந்தப்புள்ளி கோரியிருந்தது. இம்மாதம் 5ஆம் தேதியுடன் அதற்கான காலக்கெடு முடிந்த நிலையில், அதற்கு ஏழு விண்ணப்பங்கள் வந்துள்ளன.
செந்தோசா-பிரானி பெருந்திட்டத்தின்கீழ் வரும் மேம்பாடுகள் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படும் என்று அந்தப் பேச்சாளர் தெரிவித்தார். முதலில் அங்குள்ள சில பகுதிகளுக்குப் புத்துயிரூட்டப்படும் என்றும் அவ்விரு தீவுகளின் மற்ற பகுதிகளுக்கான திட்டங்கள் மெருகூட்டப்படும் என்றும் அவர் விளக்கினார்.
கூடுதல் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்.
இந்தப் பெருந்திட்டத்தின்படி, இப்போது துறைமுக முனையமாக இருக்கும் புலாவ் பிரானி தீவும் அதனை ஒட்டியுள்ள செந்தோசாவும் வாட்டர்ஃபிரன்ட், வைப்ரன்ட் கிளஸ்டர், ஐலண்ட் ஹார்ட், பீச்ஃபிரன்ட், ரிட்ஜ்லைன் என ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கப்படும்.
ரிட்ஜ்லைன், பீச்ஃபிரன்ட் மண்டலங்களுக்கான பணிகள் முன்கூட்டியே தொடங்கப்படலாம் எனத் தெரிகிறது.
பீச்ஃபிரன்ட் மற்றும் இம்பியா பகுதிகளுக்கான கருத்தியல் சார்ந்த திட்டமிடல் சேவைகளை வழங்க விரும்பும் உள்ளூர், அனைத்துலக நிறுவனங்கள் அதன் தொடர்பில் இம்மாதம் 19ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம். அதன்பின், அந்தச் சேவைகளுக்கு ஐந்து நிறுவனங்கள்வரை தேர்வு செய்யப்படலாம்.
செந்தோசா-பிரானி பெருந்திட்ட மறுஆய்வு தொடர்பான பரந்த திட்டங்கள் குறித்து விவரித்த கேபிஎம்ஜி நிறுவனத்தின் பங்காளி திரு கியோம் சாஷே, கொவிட்-19 காரணமாக பயனீட்டாளர்களின் முன்னுரிமைகளும் நடத்தைப் போக்கும் மாறியிருக்கலாம் என்பதால் இந்த மறுஆய்வு சரியான நேரத்தில் எடுக்கப்பட்டு உள்ள முடிவு எனக் குறிப்பிட்டார். எடுத்துக்காட்டாக, நெருக்கம் அதிகமுள்ள இடங்களை சுற்றுப்பயணிகள் விரும்பாமல் போகலாம் என்றார் அவர்.
கொரோனா தொற்று மின்னிலக்கப் பொருளியல் வளர்ச்சியை முடுக்கிவிட்டுள்ள நிலையில், மின்னிலக்கத் தீர்வுகளைப் பயன்படுத்தி சுற்றுப்பயண அனுபவத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்று ஆராய்வதற்கான வாய்ப்பையும் இந்த மறுஆய்வு வழங்கும் என்று திரு சாஷே கூறினார்.
எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டு வருவதால் உள்ளூர் சுற்றுப்பயணிகளைத் தக்கவைப்பது குறித்தும் ஆராயப்படும் என்றும் அவர் சொன்னார்.
பசுமையான நாடாக உருமாற சிங்கப்பூர் பெருமுயற்சி எடுத்துவரும் நிலையில், நீடித்து நிலைக்கத்தக்க பல அம்சங்களை பெருந்திட்டத்தில் உள்ளடக்கவும் இந்த மறுஆய்வு வழிவகுக்கும் என்றார் திரு சாஷே.
அவ்வகையில், எதிர்கால வளர்ச்சித் திட்டங்களுக்கு வழிகாட்டக்கூடிய சூழலியல் ஆய்வுகளை செந்தோசா மேம்பாட்டுக் கழகம் மேற்கொண்டு வருகிறது.

