இவ்வாண்டிற்கான சிங்கப்பூர் கிராண்ட் பிரீ ஃபார்முலா 1 கார் பந்தயத்திற்கான நுழைவுச்சீட்டுகள் நாளை காலை 10 மணி முதல் விற்பனைக்கு வருகின்றன.
மரீனா பே பந்தயத் தடத்தில் வரும் செப்டம்பர் 30 - அக்டோபர் 2 தேதிகளில் நடைபெறவுள்ளது. அம்மூன்று நாள்களுக்குமான 'கிராண்ட் ஸ்டாண்ட்' நுழைவுச்சீட்டு விலை $298ல் இருந்து தொடங்குகிறது.
ரிகானா, டுவா லிப்பா, அரியானா கிராண்டே, குவீன் அண்ட் ஆடம் லாம்பர்ட், லிங்கின் பார்க், ஜே சோ உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொள்ளும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் இடம்பெற இருக்கின்றன.
நடப்பிலுள்ள பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளுக்கு இணங்கி பந்தயமும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதை உறுதிசெய்யும் வகையில் சிங்கப்பூர் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாக சிங்கப்பூர் ஜிபி அமைப்பு தெரிவித்தது.
சக்கர நாற்காலி வசதியுடன் கூடிய ஒருநாள் நுழைவுச்சீட்டு $38 (வெள்ளிக்கிழமை), $88 (சனிக்கிழமை), $128 (ஞாயிற்றுக்கிழமை) விலைகளில் கிடைக்கும்.
singaporegp.sg எனும் இணையத்தளம் அல்லது +65 6229 7777 எனும் நேரடி அழைப்பு எண் வழியாக கூடுதல் விவரங்களைப் பெறலாம்.
இரவு நேர எஃப்1 பந்தயமான சிங்கப்பூர் கிராண்ட் பிரீ, கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக கடந்த ஈராண்டுகளில் நடத்தப்படவில்லை.
இந்நிலையில், மேலும் ஏழு ஆண்டுகளுக்கு அப்பந்தயத்தை நடத்த சென்ற ஜனவரி மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது.
கடைசியாக 2019ஆம் ஆண்டில் இடம்பெற்ற சிங்கப்பூர் கிராண்ட் பிரீ 268,000 பார்வையாளர்களை ஈர்த்தது.
இவ்வாண்டு மொத்தம் 23 எஃப்1 பந்தயங்கள் நடக்கவுள்ள நிலையில், 18வது பந்தயமாக சிங்கப்பூர் கிராண்ட் பிரீ இடம்பெற இருக்கிறது. இவ்வாண்டில் இதுவரை மூன்று பந்தயங்கள் முடிந்துள்ள நிலையில், ஃபெராரி குழுவின் சார்ல்ஸ் லெக்லெர்க் 71 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். ஏழுமுறை உலக வெற்றியாளரான லூவிஸ் ஹேமில்டன் (28 புள்ளிகள்) ஐந்தாமிடத்திலும் நடப்பு வெற்றியாளரான மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் (25 புள்ளிகள்) ஆறாமிடத்திலும் உள்ளனர்.

