கிரேட்டர் சௌதர்ன் வாட்டர்ஃபிரன்ட் பகுதியில் அமையும்; மூவாண்டுகளுக்குள் முதல் 'பிடிஓ' விற்பனை
கிரேட்டர் சௌதர்ன் வாட்டர்ஃபிரன்ட் பகுதியிலுள்ள கெப்பல் கிளப் அமைந்துள்ள இடத்தில் கிட்டத்தட்ட 6,000 வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள் கட்டப்படும். மூன்று ஆண்டுகளுக்குள் அங்கு முதலாவது 'பிடிஓ' திட்ட வீடுகள் விற்பனைக்கு வரும்.
அந்த 48 ஹெக்டர் இடத்தில் கட்டப்படவிருக்கும் 9,000 வீடுகளின் ஒரு பகுதியாக இவை அமையும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ நேற்று தெரிவித்தார். அவ்வீடுகள் இயற்கைக்கு நெருக்கமான, தனித்துவமான நீர்முகப்பு வாழ்க்கையை வழங்கும்.
எஞ்சிய 3,000 வீடுகள் தனியார் வீடுகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொது, தனியார் வீடமைப்புத் திட்டங்கள் அடுத்த மூன்று முதல் ஐந்தாண்டுகளில் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் என்று நகர மறுசீரமைப்பு ஆணையம் தெரிவித்து இருக்கிறது.
பிடாடாரி பேட்டையில் கிட்டத்தட்ட பாதி அளவுள்ள அந்த 48 ஹெக்டர் இடமானது, முதிர்ச்சி அடைந்த பேட்டையான புக்கிட் மேராவின்கீழ் வருகிறது. தெலுக் பிளாங்கா சாலை, பெர்லேயர் கிரீக், புக்கிட் செர்மின் ஆகியவற்றால் அது சூழப்பட்டுள்ளது.
"மையப் பகுதியில், இரு எம்ஆர்டி நிலையங்களுக்கு அருகே அமைந்துள்ளதால் அந்தக் குடியிருப்புப் பேட்டையை கார் பயன்பாடு குறைவானதாகவும் குடியிருப்பாளர்கள் நடந்து அல்லது மிதிவண்டி மூலம் எளிதாகச் செல்லும் வகையிலும் வைத்திருக்க விரும்புவோம்," என்றார் அமைச்சர் லீ.
வட்டப் பாதையில் வரும் லேப்ரடார் பார்க், தெலுக் பிளாங்கா ஆகிய இரு எம்ஆர்டி நிலையங்களும் அவ்வீடுகளின் எதிர்காலக் குடியிருப்பாளர்களுக்குச் சேவையாற்றும். அவ்விரு நிலையங்களும் நடைபாதைகள் மூலமாக அந்தக் குடியிருப்புப் பேட்டையுடன் இணைக்கப்படும்.
அந்த 48 ஹெக்டர் இடத்தில் கிட்டத்தட்ட 20% பூங்காக்களாகவும் காலி இடங்களாகவும் இருக்கும். அப்பேட்டையில் அமையும் நான்கு பசுமை வழித்தடங்களையும் அது உள்ளடக்கும்.
சூழலியல் தாக்க ஆய்வுப் பரிந்துரைகள் மற்றும் இயற்கை ஆர்வலர் குழுக்களின் கருத்துகள் இந்தத் திட்டங்களை வழிநடத்துவதாக திரு லீ குறிப்பிட்டார். சூழலியல் தாக்க ஆய்வு தொடர்பில் பொதுமக்களுடன் கலந்தாலோசித்த பிறகு அவை மெருகூட்டப்படலாம் என்றும் அவர் சொன்னார்.
"அவ்விடம் நகர் மையத்தை ஒட்டி அமைந்துள்ளதால், வேலைகளுக்கு அருகே வீடுகளைக் கொண்டு வருகிறோம். இது, நகரின் மையப் பகுதியில் அதிகமான வீடமைப்புத் தெரிவுகளையும் கலப்புப் பயன்பாட்டுத் திட்டங்களையும் வழங்கும் எங்களது முயற்சியின் ஓர் அங்கம்," என்று அமைச்சர் லீ குறிப்பிட்டார்.
கெப்பல் கிளப்பில் உள்ள பிரௌன்ஃபீல்ட் தளத்தில் இந்த அனைத்து மேம்பாட்டுப் பணிகளும் இடம்பெறும். கோல்ஃப் திடலுக்கான குத்தகைக்காலம் முடிந்ததும் அந்நிலப்பகுதி வீடமைப்புக்கு ஏற்றபடி மாற்றப்படும் என்று திரு லீ சொன்னார்.
கோல்ஃப் திடலின் குத்தகை வரும் ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைவதாக சிங்கப்பூர் நில ஆணையத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
முன்னாள் பாசிர் பாஞ்சாங் மின்நிலையக் கட்டடங்களையும் தனித்துவமிக்க, பலபயன் வட்டாரமாக உருமாற்றும் திட்டங்கள் இருப்பதாக அமைச்சர் லீ கூறி இருக்கிறார்.
இப்புதிய வீடமைப்புத் திட்டத்திற்குப் பெரும் வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

