உக்ரேன் மீதான படையெடுப்பின்போது அந்நாட்டுப் பெண்கள் மீது ரஷ்யப் படையினர் தொடுத்த வன்முறை குறித்து விசாரணை தேவை என்றும் குழந்தைகளுக்கு அதிக பாதுகாப்பு தேவை என்றும் ஐநா உயரதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
"பாலியல் வன்கொடுமைகளும் குற்றங்களும் இடம்பெறுவதாக அதிக அளவில் கூக்குரல்கள் ஒலிக்கின்றன. இத்தகைய குற்றச்சாட்டுகள் சுதந்திரமாக விசாரிக்கப்பட்டு, நீதி நிலைநாட்டப்பட வேண்டும்," என்று ஐநா பெண்கள் அமைப்பின் இயக்குநர் சிமா பகோஸ் வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்யப் படையெடுப்பு காரணமாக உக்ரேனில் 4.8 மில்லியன் குழந்தைகள் தங்களது வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்துவிட்டதாக யூனிசெஃப் அமைப்பு தெரிவித்து உள்ளது. அங்கு இன்னும் 3.2 மில்லியன் குழந்தைகள் தங்களது வீடுகளில் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அவர்களில் பாதிப் பேர் போதிய உணவு கிடைக்காத அபாய நிலையில் இருக்கலாம் என்றும் அவ்வமைப்பு கூறியது.
இதனிடையே, உக்ரேனின் தென்துறைமுக நகரான மரியபோலில் சண்டை காரணமாக 10,000க்கும் மேற்பட்டோர் மாண்டு விட்டதாக அந்நகரின் மேயர் வடிம் பாய்சென்கோ தெரிவித்துள்ளார். தெருக்களில் மனித உடல்கள் 'தரைவிரிப்பு' போன்று கிடப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அந்நகரில் இன்னும் 120,000 பேர் இருப்பதாகவும் அவர்களுக்கு உடனடியாக உணவு, நீர், மருந்துப்பொருள்கள் ஆகியவை தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில், மரியபோல் நகர முற்றுகையின்போது ரஷ்யா வேதிப்பொருள் அடங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது. அதன் உறுதித்தன்மையை ஆராய்ந்து வருவதாக உக்ரேன் தற்காப்பு துணை அமைச்சர் ஹன்னா மலியர் கூறி உள்ளார்.
புட்டின் எச்சரிக்கை
இதற்கிடையே, ரஷ்யாவைத் தனிமைப்படுத்த மேற்கத்திய நாடுகள் மேற்கொள்ளும் முயற்சிகள் தோல்வியில் முடியலாம் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் எச்சரித்திருக்கிறார்.
கடினமான சூழ்நிலைகளிலும் ரஷ்யாவால் உச்சம் தொட முடியும் என்பதற்கு சோவியத் ஒன்றியத்தின் விண்வெளிச் சாதனைகளே சான்று என அவர் குறிப்பிட்டார்.
"இன்றைய நவீன உலகில் எந்த ஒரு நாட்டையும், அதிலும் ரஷ்யா போன்ற ஒரு பெரிய நாட்டைத் தனிமைப்படுத்துவது என்பது முடியாத செயல்," என்றார் அதிபர் புட்டின்.
அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ரஷ்யாவை முடக்கும் வகையில் பொருளியல் தடைகளை விதித்துள்ளதை அடுத்து, இனி ஒருபோதும் மேற்கத்திய நாடுகளைச் சார்ந்திருக்கப்போவதில்லை என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

