சிங்கப்பூருக்குத் தரைவழிப் பயணம் மேற்கொள்வோருக்குக் கட்டுப்பாடு மேலும் தளர்த்தப்படுகிறது
கொவிட்-19க்கு எதிராக முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள சிங்கப்பூர் குடிமக்கள், சிங்கப்பூர் நிரந்தரவாசிகள், நீண்டகால அனுமதி அட்டையை வைத்திருப்பவர்கள் ஆகியோர் இனி தரைவழி சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்ளும்போது எஸ்ஜி பயண வருகை அட்டையை சமர்ப்பிக்கத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாட்டுத் தளர்வு நாளை முதல் நடப்புக்கு வரும்.
எனினும், கடல் அல்லது ஆகாயம்வழி சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்வோர் தொடர்ந்து எஸ்ஜி பயண வருகை அட்டையை நிரப்பி சமர்ப்பிக்கவேண்டும்.
மலேசியாவையும் சிங்கப்பூரையும் தரைவழி இணைக்கும் உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் உள்ள போக்குவரத்து அளவைக் கருத்தில்கொண்டு இந்தக் கட்டுப்பாட்டைத் தளர்த்த முடிவெடுத்ததாக குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் நேற்று தெரிவித்தது.
குறிப்பாக வேலை, படிப்பு போன்ற காரணங்களுக்காக அன்றாடம் தரைவழி சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்வோருக்கு இந்தக் கட்டுப்பாட்டுத் தளர்வு பெரிதும் உதவும் என்று ஆணையம் குறிப்பிட்டது.
இதற்குத் தகுதிபெற சிங்கப்பூருக்குத் தரைவழிப் பயணம் மேற்கொள்பவர்கள், அதற்கு முன்பு ஏழு நாள்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்ட பிரிவில் இடம்பெறும் நாடுகளுக்கோ பகுதிகளுக்கோ பயணம் மேற்கொண்டிருக்கக்கூடாது.
ஒருவர் கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு ஆளாகும் சாத்தியம் அதிகம் இருப்பதாக சிங்கப்பூர் வகைப்படுத்தும் நாடுகள் அந்தப் பிரிவில் இடம்பெறும். தற்போது எந்த நாடும் அதில் இடம்பெறவில்லை.
சிங்கப்பூரில் கொவிட்-19 தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டவர்கள் 'டிரேஸ்டுகெதர்' அல்லது 'ஹெல்த்ஹப்' செயலிகளின்வழி அதை உறுதிப்படுத்தவேண்டும்.
வெளிநாடுகளில் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்கள், முதன்முறையாக சிங்கப்பூருக்கு வந்தவுடன் அந்த விவரங்களை சுகாதார அமைச்சின் பதிவகத்தில் பதிவுசெய்யவேண்டும். சிங்கப்பூருக்கு வருவதற்குமுன் தடுப்பூசி விவரங்களைச் சரிபார்க்கும் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையத்தின் தளத்தில் தங்களின் மின்னிலக்க தடுப்பூசி ஆவணத்தை சமர்ப்பித்து அவ்வாறு செய்யலாம்.
மின்னிலக்க ஆவணத்தைச் சமர்ப்பிக்க முடியாதவர்கள் அல்லது அது இல்லாதவர்கள் குடிநுழைவு சோதனைச் சாவடிகளில் அதிகாரிகளிடம் தங்களின் காகித ஆவணங்களைச் சமர்ப்பிக்கவேண்டும்.
கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலைக் கையாள 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் தேதியன்று எஸ்ஜி பயண வருகை அட்டை முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.

