அமெரிக்காவின் நியூயார்க் நகரில் புரூக்லின் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடுத் தாக்குதலின் தொடர்பில் சந்தேகத்திற்குரிய ஆடவரை அடையாளம் கண்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் நிகழ்ந்த இச்சம்பவத்தில் குறைந்தது 23 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஐவர் கவலைக்கிடமாக உள்ளனர். காயமடைந்தோரில் 10 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவர்களில் கவலைக்கிடமாக இருப்போரும் அடங்குவர்.
சந்தேக நபரான 62 வயது ஃபிராங்க் ஜேம்ஸை (படம்) அதிகாரிகள் தேடி வருகின்றனர். அவர் பெரிய உடல் வாகைக் கொண்டவரென்றும் ஆரஞ்சு நிற சட்டை, முகக்கவசம், பச்சை நிற தலைக்கவசம், ஆகியவற்றை அணிந்திருந்ததாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் காவல்துறையிடம் கூறியிருந்தனர்.
சம்பவத்துடன் தொடர்பிருந்ததாகச் சந்தேகிக்கப்படும் வாகனம் ஒன்றை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த வாகனத்தின் சாவியை சம்பவ இடத்தில் கண்டெடுத்ததாகக் காவல்துறையினர் கூறினர். வாகனம் ஃபிலடெல்ஃபியா நகரில் வாடகைக்கு எடுக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.