இலங்கை 1948ல் சுதந்திரம் அடைந்ததிலிருந்து அதன் பொருளியல் முதல் முறையாக அதல
பாதாளத்தில் விழுந்துவிட்டது. தற்போது இலங்கை அரசாங்கத்திடம் US$400 மில்லியன் (S$542 மில்லியன்) மட்டுமே அந்நியச் செலாவணி கையிருப்பு உள்ளது. அதனால் அத்தியாவசியப் பொருள்களை இறக்குமதி செய்ய இயலாமல் அந்நாடு தவிக்கிறது.
இலங்கை நாணய மதிப்பு உலக அளவில் ஆக மோசமான நிலையை எட்டி உள்ளது. இலங்கையின் பணவீக்கம் கிட்டத்தட்ட 30% ஆகிவிட்டது. 22 மில்லியன் மக்களில் பெரும்பாலானோர் உணவுப்பொருள் மற்றும் மருந்துகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். தினமும் 13 மணிநேர மின்தடை அவர்
களின் சிரமத்தை மேலும் கடினமாக்கி உள்ளது. இதன் காரணமாக மக்களிடம் பெரும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள், கண்டன பதாகைகள், சமூக ஊடக விமர்சனங்கள் என பல வழி களிலும் மக்கள் தங்களது எதிர்ப்பை அரசாங்கத்திற்கு தெரி வித்து வருகின்றனர். நிலைமை மேலும் மோசமடைவதைத் தவிர்க்கும் விதமாக, இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்டக்குழு ஒன்று வாஷிங்டனுக்கு அவசரமாகப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறது.
அனைத்துலக பண நிதியத்திடமும் இதர அமைப்புகளிடம் US$4 பில்லியன் (S$5.4 பில்லியன்) உதவி கேட்பதற்காக புதிய நிதி அமைச்சர் அலி சாப்ரி தலைமையிலான அக்குழு அங்கு நாளை (ஏப்ரல் 18) செல்ல உள்ளது. எரிபொருள், உணவுப்பொருள்கள் போன்றவற்றை இறக்குமதி செய்ததற்கான செலவுத் தொகையைச் செலுத்த இந்த உதவி இலங்கைக்கு உடனடியாக தேவைப்படுகிறது.
இதற்கு முன்னர் 2016ஆம் ஆண்டு US$1.5 பில்லியனை அனைத்துலக பண நிதியம் இலங்கைக்குக் கடனாக வழங்க முன்வந்து முதற்கட்டமாக US$1.3 பில்லியனை வழங்கியது.
இந்நிலையில், கொழும்பு பங்குச் சந்தையை நாளை (ஏப்ரல் 18) முதல் ஐந்து நாள்களுக்கு முடக்கி வைக்க இலங்கை பங்குச் சந்தை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. நாட்டின் தற்போதைய பொருளியல் நிலைமையை முதலீட்டாளர்கள் உணர்ந்து செயல்படுவதற்கு அவகாசம் வழங்கும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக ஆணையம் கூறியது.

