கி. ஜனார்த்தனன்
சித்திரைப் புத்தாண்டையொட்டி, வெளிநாட்டு ஊழியர்கள் சுமார் 100 பேர் நேற்று லிட்டில் இந்தியாவில் உள்ள ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயத்தில் விருந்தளித்து சிறப்பிக்கப்பட்டனர். 'பிபிடி லாட்ஜ் 1பி', 'ஏவரி லாட்ஜ்', 'டாவ்பேவ் எஃப்சிடி' ஆகிய மூன்று தங்குவிடுதிகளைச் சேர்ந்த அந்த ஊழியர்கள் ஆலயத்தின் பலநோக்கு மண்டபத்தில் வாழை இலையில் அறுசுவை உணவு உண்டு களித்தனர்.
கொவிட்-19 காரணமாக 2020 முதல் தங்குவிடுதிகளிலேயே அடைபட்டுக் கிடக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் இப்போது சில நிபந் தனைகளுடன் வெளியில் சென்றுவர அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு '18 ஸ்டெப்ஸ்' என்ற சமூக சேவைக் குழு அந்த ஊழியர்களை மகிழ்ச்சிப்படுத்த வாழை இலை விருந்துக்கு ஏற்பாடு செய்தது.
"சிங்கப்பூரின் முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றும் இவர்களுக்கு புத்தாண்டு உணர்வைத் தந்து அவர்களை மகிழ்விப்பதை எங்களது கடமையாகக் கருதி இதைச் செய்தோம்," என்று விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்த '18 ஸ்டெப்ஸ்'' இணை நிறுவனர் தேவராஜ் நம்பிராஜன் தமிழ் முரசிடம் கூறினார்.
விருந்துண்டு மகிழ்ந்த தமிழ்நாடு, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் மூன்றாண்டுகளுக்குப் பிறகு இன்றுதான் வாழையிலையில் வயிராற சாப்பிட்டேன் என்றார்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன் பாலபிரியன், 39, என்ற கட்டுமானத் துறை ஊழியர் "திருமண விருந்தில் கலந்துகொண்ட மகிழ்ச்சி எனக்கு ஏற்பட்டது," என்று கூறினார்.

