2021ஆம் ஆண்டில் சிங்கப்பூர் குடும்பங்கள் 1.82 மில்லியன் டன் கழிவுகளைக் கொட்டின
சிங்கப்பூரில் கடந்த 2020ஆம் ஆண்டைப் போலவே, 2021ஆம் ஆண்டிலும் உள்ளூர் அளவிலான கழிவு மறுசுழற்சி விகிதம் 13 விழுக்காடாக நீடித்தது.
குடும்பங்கள் அதிக அளவில் கழிவுகளைக் கொட்டியபோதும், பத்தாண்டுகளில் ஆகக் குறைவான இந்த மறுசுழற்சி நிலை தொடர்ந்தது.
வருடாந்திர கழிவு, மறுசுழற்சிப் புள்ளிவிவரங்களை தேசிய சுற்றுப்புற வாரியம் நேற்று வெளியிட்டது. அதன்படி, சென்ற ஆண்டில் சிங்கப்பூர் குடும்பங்கள் 1.82 மில்லியன் டன் கழிவுகளை உருவாக்கின. முந்திய 2020ஆம் ஆண்டில் இந்த அளவு 1.77 மில்லியன் டன்னாக இருந்தது.
இவ்விரு ஆண்டிலும் 13% கழிவுகள் மறுசுழற்சி செய்யப்பட்டன. இவ்விகிதம் கடந்த 2017-2019 காலகட்டத்தில் 17 முதல் 19 விழுக்காட்டிற்குள் இருந்தது.
நீடித்து நிலைக்கத்தக்க சிங்கப்பூர் திட்டத்தின்கீழ், வரும் 2030ஆம் ஆண்டுவாக்கில் மறுசுழற்சி விகிதத்தை 30 விழுக்காடாக உயர்த்துவதே இலக்கு.
நீலநிற மறுசுழற்சிக் குப்பைத்தொட்டிகள் மாசுபடுத்தப்படுவதே இந்த இலக்கை எட்டுவதில் முக்கியத் தடையாக விளங்குகிறது.
குறிப்பாக உணவு, பானக் கழிவுகளிலிருந்து ஏற்படும் கசிவு, மின்கழிவுகள், 'ஸ்டைரோஃபோம்' எனும் மெத்துப்பொருள் போன்றவற்றால் நீலநிறக் குப்பைத்தொட்டிகளில் போடப்படும் குப்பைகளில் கிட்டத்தட்ட 40% குப்பைகளை மறுசுழற்சி செய்ய முடிவதில்லை என்று வாரியம் தெரிவித்தது.
"ஆடைகள், மென்பொம்மைகள் போன்றவற்றை நீலநிறக் குப்பைத் தொட்டியில் போடக்கூடாது. ஆனால், அவற்றையும் அதில் போடுகின்றனர். மாறாக, நல்ல நிலையில் இருப்பின் அவற்றை நன்கொடையாக அளிக்கலாம்," என்று வாரியம் குறிப்பிட்டது.
அத்துடன், மறுசுழற்சிக் குப்பைத்தொட்டிக்குள் போடுமுன் பலரும் அவ்வகைக் கழிவுகளை அலசுவதில்லை. அது, நீலநிறக் குப்பைகளை மேலும் மாசுபடுத்தி, அப்பொருள்களை மறுசுழற்சி செய்யத்தகாததாக ஆக்கிவிடுகிறது.
சரியான மறுசுழற்சி நடைமுறைகளை மக்களுக்குத் தெரியப்படுத்தும் விதமாக, எந்தெந்தப் பொருள்களை நீலநிற மறுசுழற்சிக் குப்பைத் தொட்டிகளில் போடலாம், எவற்றைப் போடக்கூடாது எனும் விவரங்களை வாரியம் தனது 'ரீசைக்கிள் ரைட்' இணையப்பக்கத்தில் விவரமாகக் குறிப்பிட்டு உள்ளது.
இந்நிலையில், கொவிட்-19 தொற்றுக்குமுன் 2019ஆம் ஆண்டில் மறுசுழற்சி விகிதம் 59 விழுக்காடாக இருந்ததை நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ சுட்டினார்.
"வரும் 2030ஆம் ஆண்டிற்குள் ஒருவரிடமிருந்து குப்பை நிரப்பும் நிலத்திற்குச் செல்லும் குப்பையின் அளவை 30% குறைக்க வேண்டும் எனும் நமது இலக்கை அடைய, நாம் அதிகம் நீடித்து நிலைக்கத்தக்க வகையில் நமது பயனீட்டு, உற்பத்தி நடைமுறைகளைக் கொண்டிருக்க வேண்டும்," என்றார் திருவாட்டி ஃபூ.
நேற்று நடைபெற்ற 2022 சிங்கப்பூர் அனைத்துலக நீர் வாரம் மற்றும் சிங்கப்பூர் தூய சுற்றுக்சூழல் உச்சநிலை மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அமைச்சர் ஃபூ இவ்வாறு பேசினார்.

