ரஷ்யப் படையெடுப்பால் இதுவரை பாதிக்கப்படாமல் இருந்த லிவிவ் நகரம் உட்பட உக்ரேனின் மேற்கு, தெற்கு வட்டாரங்களில் நேற்று பல்வேறு வெடிப்புகள் நிகழ்ந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
லிவிவ் நகரிலிருக்கும் உக்ரேனிய ராணுவ உள்கட்டமைப்புகள், ஆற்றல்மிக்க ரஷ்ய ஏவுகணைகளால் குறிவைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
"தாக்குதலில் எழுவர் மாண்டுவிட்டனர். காயமுற்ற 11 பேரில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது," என்று லிவிவ் நகர மேயர் மக்சிம் கொஸிட்ஸ்கி தெரிவித்தார்.
தாக்குதல் காரணமாக அந்தக் கட்டடங்கள் கொழுந்துவிட்டு எரிகின்றன என்றும் அவை கடுமையாகச் சேதமடைந்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
குடியிருப்புக் கட்டடங்களுக்குக் கரும்புகையைக் காண முடிந்தது என்றும் தாக்குதலின்போதும் அதன்பின்னும் அபாய ஒலி ஒலிக்கப்பட்டது என்றும் லிவிவ் நகரவாசி ஒருவர் சொன்னதாக 'ஏஎஃப்பி' செய்தி கூறியது.
அண்மைய நாள்களாக உக்ரேனின் ராணுவ உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து ரஷ்யா தாக்குதல் தொடுத்து வருகிறது.
மக்கள் வெளியேறும் வழிகளைத் தடுத்து, ரஷ்யப் படைகள் குண்டுவீசி வருவதால், நேற்று இரண்டாவது நாளாக நாட்டின் கிழக்குப் பகுதி நகரங்களில் இருந்து மக்களை வெளியேற்றுவதை நிறுத்திவைத்ததாக உக்ரேன் தெரிவித்தது.
"அனைத்துலக மனிதாபிமானச் சட்டத்தை மீறும் வகையில், மக்கள் வெளியேறும் வழிகளைத் தடுப்பதையும் குண்டுவீசுவதையும் ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்கள் நிறுத்தவில்லை," என்று உக்ரேன் துணைப் பிரதமர் ஐரினா வெரெஸ்சுக் குற்றஞ்சாட்டினார்.
'மாஸ்கோவில் 200,000 பேர் வேலையிழக்கும் அபாயம்'
இதனிடையே, ரஷ்யாமீது மற்ற நாடுகள் விதித்துள்ள பொருளியல் தடைகளால் தலைநகர் மாஸ்கோவிலுள்ள வெளிநாட்டு நிறுவனங்களின் பணியாளர்கள் கிட்டத்தட்ட 200,000 பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று அந்நகர மேயர் செர்கே சொப்யானின் தெரிவித்து இருக்கிறார்.
இந்நிலையில், மாஸ்கோவில் வேலைவாய்ப்பு ஆதரவு வழங்க 41 மில்லியன் அமெரிக்க டாலர் ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் கடந்த வாரம் ஒப்புதல் அளித்துள்ளதாக திரு சொப்யானின் குறிப்பிட்டார்.
"முதற்கட்டமாக, ரஷ்யாவில் தற்காலிகமாகச் செயல்பாடுகளை நிறுத்திவைத்துள்ள அல்லது ரஷ்யாவைவிட்டு வெளியேற முடிவுசெய்துள்ள நிறுவனங்களின் ஊழியர்களுக்கு ஆதரவு வழங்க அத்திட்டம் இலக்கு கொண்டுள்ளது," என்று அவர் கூறினார்.
கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரேன்மீதான ரஷ்யப் படையெடுப்பு தொடங்கியதை அடுத்து, மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்களது செயல்பாடுகளை நிறுத்திவைப்பதாக அல்லது அந்நாட்டைவிட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளன.

