இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நீடித்துவரும் நிலையில், அதிபர் கோத்தபாய ராஜபக்சே முன்னிலையில் புதிதாக 17 அமைச்சர்கள் நேற்று பதவியேற்றுக்கொண்டனர்.
அரசு நிர்வாகம் சீராக நடைபெற்று, நெருக்கடிக்கு விரைவில் தீர்வுகாணும் நோக்கில் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளோரில் எண்மர் முன்னாள் அமைச்சர்கள் என்று 'கொழும்பு பேஜ்' ஊடகச் செய்தி குறிப்பிட்டது.
ஜான்ஸ்டன் ஃபெர்னாண்டோ, ரோகித அபேகுணவர்தன உள்ளிட்ட சில முன்னாள் அமைச்சர்களுக்குப் புதிய அமைச்சரவையில் இடமளிக்கப்படவில்லை. நமல் ராஜபக்சே, சமல் ராஜபக்சே உட்பட ராஜபக்சே குடும்பத்தைச் சேர்ந்த எவரும் அமைச்சரவையில் சேர்க்கப்படவில்லை.
நாடு விடுதலை அடைந்தபின் இதுவரை இல்லாத அளவிற்கு இலங்கை கடும் பொருளியல் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.
உணவுப்பொருள்கள், மருந்துப்பொருள்கள், எரிபொருள் பற்றாக்குறை, கடும் விலையேற்றம், மின்வெட்டு போன்ற பிரச்சினைகளால் மக்கள் பேரின்னலை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால், வெகுண்டெழுந்த மக்கள், இப்பிரச்சினைகளை அரசாங்கம் சரிவரக் கையாளத் தவறிவிட்டதாகக் கூறி, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து, இம்மாதம் 3ஆம் தேதி, பிரதமர் மகிந்த ராஜபக்சே தவிர்த்து மற்ற 26 அமைச்சர்களும் தங்களது பதவிகளைத் துறந்தனர். அதற்கு மறுநாளே நான்கு புதிய அமைச்சர்களை அதிபர் கோத்தபாய நியமித்தார்.
எரிபொருள் 35% விலையேற்றம்
இதற்கிடையே, இலங்கை உள்ளூர் எரிபொருள் சந்தையில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டிருக்கும் 'லங்கா ஐஓசி' நிறுவனம் எரிபொருள் விலையை 35% வரை நேற்று உயர்த்திவிட்டது. இலங்கை நாணய மதிப்பில், டீசல் விலை லிட்டருக்கு 75 ரூபாய் உயர்த்தப்பட்டு 327 ரூபாய்க்கும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 35 ரூபாய் உயர்த்தப்பட்டு 367 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன.
அனைத்துலகப் பண நிதியத்திடம் 4 பில்லியன் அமெரிக்க டாலர் உதவிகோரி இலங்கைப் பேராளர் குழு வாஷிங்டன் சென்றுள்ள நிலையில், இந்த விலையேற்றத்தால் அந்நாட்டு மக்கள் மேலும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

