இலங்கையில் உணவு, எரிபொருள் பற்றாக்குறையை எதிர்த்து தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. அந்த நாட்டின் அதிபர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மக்கள் ஆர்ப்பரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், ரம்புக்கனா என்ற மத்திய நகரில் செவ்வாய்க் கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது வன்செயல் வெடித்தது. ஒருவர் கொல்லப்பட்டார். இதர 13 பேர் காயமடைந்தனர். அவர்களில் மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதை அடுத்து அதிபர் கோத்தபாய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. "உடனே பதவியில் இருந்து விலகுங்கள்," என்று 'சமாஜி ஜனா பலவேகயா' என்ற முக்கிய எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஹர்ஷா டி சில்வா டுவிட்டரில் கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், மேலும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் அர சாங்கத்திற்கான தங்கள் ஆதரவை நேற்று மீட்டுக்கொண்டனர்.
இலங்கை பெரும் கடன் சுமையில் சிக்கிவிட்டது. அந்நியச் செலா வணி கையிருப்பு இல்லாததால் எரிபொருள் முதலானவற்றை இறக்குமதி செய்ய முடியவில்லை.
விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு கூடிவிட்டது. இவற்றுக்கு அதிபரே பொறுப்பு என்றும் அவர் பதவி விலக வேண்டும் என்றும் கோரி தொடர் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.
ரம்புக்கனாவில் காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதில் முதன் முதலாக உயிர் பலி ஏற்பட்டது.
இது பற்றி கருத்து கூறிய அதிபரின் சகோதரரான பிரதமர் மகிந்த ராஜபக்சே, அந்தச் சம்பவத்தை அறிந்து மிகவும் மனமுடைந்து போய்விட்டதாக டுவிட்டரில் கூறினார். வன்செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.

