உக்ரேனின் கிழக்குப் பகுதிகளில் ரஷ்யா தாக்குதலைத் தீவிரப்படுத்தியது. மேலும் படைவீரர்களை அனுப்பி அந்தப் பகுதியில் இருக்கும் டோன்பாஸ் என்ற வட்டாரத்தைப் பிடிக்க முழுமூச்சாக ரஷ்யா முயன்று வருகிறது.
இதை உக்ரேன் போரின் இரண்டாம் கட்டம் என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் வர்ணித்து இருக்கிறார்.
என்றாலும் உக்ரேனிய படையினரின் கடும் எதிர்ப்பு காரணமாக ரஷ்யப் படைகள் பல இடங்களில் முன்னேற முடியவில்லை என்று பிரிட்டிஷ் வேவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உக்ரேன் மீது ரஷ்யா படைஎடுத்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஓடிவிட்ட நிலையில், நிலக்கரி சுரங்கங்களும் தொழிற்சாலைகளும் அதிகம் உள்ள உக்ரேனின் கிழக்குப் பகுதியைக் கைப்பற்ற இப்போது மாஸ்கோ முயற்சிகளை முடுக்கிவிட்டு இருக்கிறது.
கிரிமின்னா என்ற நகர் உள்ளிட்ட பல பகுதிகளை ரஷ்ய தரப்புகள் பிடித்துவிட்டதாகவும் அதன் விளைவாக அந்தப் பகுதிகளில் உள்ள உக்ரேனிய வீரர்களைச் ரஷ்ய படைகள் சூழ்ந்துகொள்ளக் கூடிய ஆபத்து இருக்கிறது என்றும் உக்ரேனிய தரப்பு தெரிவிக்கிறது.
இந்நிலையில், உக்ரேனின் கிழக்குப் பகுதியை ரஷ்ய படைகள் ஆக்கிரமிப்பதைத் தடுப்பதற்காக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உக்ரேனுக்கு மேலும் ராணுவ உதவிகளை அளிக்கப்போவதாக உறுதி கூறி இருக்கின்றன.
அமெரிக்க ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு ஏழு விமானங்கள் அடுத்த 24 மணி நேரத்தில் ஐரோப்பாவை நோக்கிச் செல்லும் என்று அமெரிக்காவை சேர்ந்த மூத்த தற்காப்பு அதிகாரி ஒருவர் நேற்றுக் கூறினார்.
இந்நிலையில், ரஷ்ய முற்றுகை யில் இருக்கும் மரியபோல் நகரில் இருந்து மாதர், சிறார், முதியவர்களைப் பாதுகாப்பாக மீட்கும் வகையில் மனிதாபிமான பாதை ஒன்றை உருவாக்குவதன் தொடர்பில் ரஷ்யாவுடன் பூர்வாங்க உடன்பாடு ஒன்றை உக்ரேன் எட்டி இருப்பதாக உக்ரேன் துணைப் பிரதமர் வெரஷ்சுக் நேற்று தெரிவித்தார்.
மரியபோல் முற்றுகையில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுவிட்டதாகவும் அந்த நகரமே அழிந்துவிட்டதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, உக்ரேன் மீது படையெடுக்க அதிபர் புட்டின் எடுத்த முடிவு சரிதானா என்று கேள்வி எழுப்பும் மூத்த தலைவர்கள் ரஷ்யாவில் இப்போது அதிக மாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

