மலேசியா: ஏராளமான மியன்மார் கைதிகள் ஓட்டம்; 6 பேர் பலி

மலேசியா: ஏராளமான மியன்மார் கைதிகள் ஓட்டம்; 6 பேர் பலி

2 mins read

மலே­சி­யா­வின் பினாங்­கில் உள்ள குடி­நு­ழைவு தடுப்­புக்­கா­வல் நிலை­யம் ஒன்­றில் இருந்த மியன்­மாரைச் சேர்ந்த 500க்கும் மேற்­பட்ட ரோஹிங்­கியா கைதி­கள் நேற்று தப்பி ஓடிவிட்­ட­னர்.

அந்­தச் சம்­ப­வத்­தில் ஆறு பேர் மரணமடைந்­து­விட்­ட­னர்.

ரோஹிங்­கியா கைதி­கள் 528 பேர், பினாங்கு-கெடா மாநில எல்லை­யில் இரு பக்­க­மும் அமைந்துள்ள அந்த நிலை­யத்­தில் இருந்து நேற்று அதிகாலை 4.30 மணிக்­குத் தப்பி ஓடி­ய­தாக குடி­நு­ழை­வுத் துறை தெரி­வித்­தது.

அந்­தச் சம்­ப­வத்­துக்­கான காரணம் பற்றி புலன் விசா­ரணை நடந்­து­வருவதா­க­வும் அது கூறி­யது. அதே­வே­ளை­யில், கைதி­கள் தப்பி ஓடிய சம்­ப­வத்­துக்கு ஓர் ஆர்ப்­பாட்­டம் கார­ணம் என்­றும் அந்த ஆர்ப்­பாட்­டம் திடீ­ரென்று கல­வ­ர­மாக மாறி­ய­தா­க­வும் 'தி ஸ்டார்' தெரி­வித்­தது.

அச்­சம்­ப­வத்­தின் போது அந்த நிலை­யத்­தின் முக்­கி­ய வாயில் கதவை கைதிகள் உடைத்து ­விட்­ட­னர். கம்பித் தடுப்­பு­க­ளை­யும் பெயர்த்துத் தள்­ளி­னர் என்று குடி­நு­ழைவு தலைமை இயக்­கு­நர் கைருல் சாய்மி தாவூத் கூறினார்.

இத­னி­டையே, தப்பி ஓடி­ய­வர்­களில் 391 பேரை அதி­கா­ரி­கள் மீண்­டும் கைது செய்­து­விட்­ட­தா­க­வும் அவர்­களில் குறைந்­த­பட்­சம் ஆறு பேர் மாண்­டு­விட்­ட­தா­க­வும் கெடா மாநில காவல்துறை ஆணை­யர் வான் ஹசான் அகம்மது நேற்று கூறி­னார்.

தப்­பி­விட்ட 131 பேரைக் பிடிக்க வேட்டை தொடங்கி இருக்­கிறது. இதற்காக இந்த இரண்டு மாநிலங்­க­ளி­லும் 13 இடங்­களில் சாலைத் தடுப்­பு­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன என்று காவல்­துறை குறிப்­பிட்­டது.

அந்த நிலை­யத்­தில் இருந்து 8 கி.மீ. தொலை­வில் பினாங்­கில் உள்ள ஜாவி என்ற நக­ரில் அதிக வாக­னங்­கள் செல்­லும் சாலை­யில் குறுக்கே புகுந்து ஓடி­ய­போது அந்த ஆறு பேரும் வாக­னங்­களில் அடி­பட்டு பலி­யாகிவிட்­ட­தாக ஆணை­யர் வான் ஹசான் தெரி வித்­தார்.

மாண்­ட­வர்­களில் ஒரு பையன், ஒரு சிறுமி உள்­ளிட்ட இருவரும் அடங்­கு­வர். சம்­ப­வம் நிகழ்ந்த போது நிலை­யத்­தில் 137 சிறார்­கள்­ உட்­பட மொத்­தம் 664 பேர் இருந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

மியன்­மாரில் நடந்த மூர்க்க மான இன வன்­செ­யல்­களிலிருந்து தப்பிக்க ரோஹிங்­கியா அக­தி­கள் பல நாடு­க­ளுக்­கும் சட்­ட­வி­ரோ­த­மாக தப்பி ஓடீ­னர்.

அவர்­களில் பல­ரும் லங்­காவி வழி­யாக மலே­சி­யா­வுக்­குள் நுழைந்­த­னர். அக­தி­களை அங்­கீ­க­ரிக்­காத மலே­சியா, ரோஹிங்­கியா அகதிகளைச் சட்­ட­வி­ரோத குடி­யே­றி­களா­கக் கரு­து­கிறது.