கொவிட்-19 பரவல் காலகட்டத்தில் சிங்கப்பூர் முஸ்லிம் சமூகம் தனது மீள்திறனை வெளிப்படுத்தியது என்று பிரதமர் லீ சியன் லூங் புகழாரம் சூட்டியுள்ளார்.
சவால்மிக்க இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இங்குள்ள பள்ளிவாசல்களில் வழக்கமான சில நடவடிக்கைகள் திரும்பியுள்ளதால் இவ்வாண்டு ரமலான் மாதம் முஸ்லிம்களுக்குச் சிறப்பானது என்று திரு லீ தெரிவித்தார். அல் முத்தக்கின் பள்ளிவாசலில் நேற்றிரவு நடந்த நோன்புத் துறப்பு நிகழ்வில் பிரதமர் லீ கலந்துகொண்டார்.
தனது முயற்சிகளுக்காக முஸ்லிம் சமூகத்தினருக்கு நன்றி கூறிக்கொண்ட பிரதமர் லீ, சிங்கப்பூரின் இன, சமய நல்லிணத்தைக் காக்க நம்பிக்கைத் தலைவர்கள் எடுத்துவரும் நடவடிக்கைகளையும் பாராட்டினார்.
அதிகமான முஸ்லிம்கள் இப்போது பள்ளிவாசல் செல்ல முடியும் எனக் குறிப்பிட்ட அவர், வெள்ளிக்கிழமை மற்றும் இரவுநேரத் தொழுகைகள் கிட்டத்தட்ட வழக்கநிலைக்குத் திரும்பியுள்ளதாகவும் சொன்னார்.
இங்குள்ள முஸ்லிம்கள் தேசிய வழிகாட்டுதல்களுக்கு இணங்க தங்களது நடைமுறைகளை மாற்றிக்கொண்டதன்மூலம் பொதுச் சுகாதாரச் சவால்களைப் புரிந்துகொண்டதாக திரு லீ சொன்னார்.
"பிணைப்புடனும் ஒற்றுமையுடனும் ஒரே மக்களாக இருந்து, நமது பல்லின, பல சமய நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் முயற்சிகளைத் தொடர்வோம் என நம்புகிறேன். அதன்மூலமே எதிர்காலத்திலும் சிங்கப்பூர் செழிப்புற்று, வெற்றிகரமான நாடாகத் திகழ முடியும்," என்று பிரதமர் லீ கூறினார்.

