மிரட்டி பணம் பறிக்க முயன்ற மலேசியருக்குச் சிறை, பிரம்படி

மிரட்டி பணம் பறிக்க முயன்ற மலேசியருக்குச் சிறை, பிரம்படி

1 mins read
fa7d390b-3b29-49ce-8e12-220f76f1ae17
-

கூட்டுரிமைக் குடியிருப்பில் பாதுகாவலராக இருந்தபோது, ஜப்பானியர் ஒருவரை மிரட்டி, பணம் பறிக்க முயன்ற மலேசியருக்கு 27 மாதச் சிறையும் மூன்று பிரம்படிகளும் தண்டனையாக விதிக்கப்பட்டன. கணேசன் குணசேகரன், 33 (படம்), எனும் இந்த ஆடவர், வெஸ்ட் கோஸ்ட் கிரசென்ட் சீஹில் கூட்டுரிமைக் குடியிருப்பில் மூத்த பாதுகாவலராகப் பணி புரிந்தார். கடந்த அக்டோபர் 19ஆம் தேதி அங்குள்ள கழிவறையில் இருந்து ஜப்பானிய ஆடவர் ஒருவரும் பெண் ஒருவரும் சேர்ந்து வெளியில் வந்ததை கணேசன் கண்டார். அதனையடுத்து, சட்டவிரோதமாக அந்தக் கூட்டுரிமைக் குடியிருப்பினுள் நுழைந்ததால் அவரை விசாரிக்க வேண்டும் என்றும் மாணவியான அந்தப் பெண்ணுடன் அவர் பாலியல் உறவுகொண்டார் என்றும் கூறி, கணேசன் அந்த ஆடவரை மிரட்டினார். உண்மையில், அக்குடியிருப்பு வாசியான அந்த ஜப்பானியப் பெண்ணுக்கு அப்போது வயது 26. அந்த ஆடவரிடமிருந்து பணம் பறிக்க விரும்பிய கணேசன், அவரிடம் $10,000 கேட்டார். முதலில் $2,000 தருவதாகவும் மீதியை ஒரு வாரத்திற்குள் தருவதாகவும் அந்த ஜப்பானிய ஆடவர் கூறினார். மாறாக, அவர் காவல்துறையை நாடினார். அதனைத் தொடர்ந்து, 2021 அக்டோபர் 22ஆம் தேதி லஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கணேசனைக் கைதுசெய்தனர். காவல்துறை அதிகாரிபோல நடித்தது, ஊழல் ஆகிய இவர்மீதான மேலும் இரு குற்றச்சாட்டுகளும் தண்டனை விதிக்கப்படுமுன் கருத்தில் கொள்ளப்பட்டன.